ஸ்பெஷல்

இரண்டு தேர்தல்கள் = ஒரு பார்வை

குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

ரமணன்

குஜராத் சட்டமன்றதேர்தலில் “என்னுடைய ரெகார்டை நானே உடைக்க உதவுங்கள்”  என்றார் மோடி. அவர் வார்த்தைகளை ஏற்ற அம்மாநில மக்கள் சட்டமன்றத்தில் உள்ள 182 இடங்களில் 157 இடங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இது பா.ஜ.க.வையே ஆச்சரியமடைய வைத்திருக்கும் செய்தி. பொதுவாக குஜராத்தில் பா.ஜ.க. மூன்று இலக்க அளவில் (115லிருந்து 127 வரை) இடங்கள் பெற்று வந்தது. அதிக பட்சமாக 2002ல் மோதி தலைமையில் 127 இடங்கள் பெற்றது. மோதி தேசிய அரசியலுக்கு நகர்ந்த பின் அது இரட்டை இலக்கத்திற்குச் சரிந்தது.

இந்தத் தேர்தலில் “விலைவாசிஉயர்வு, பொருளாதார வீழ்ச்சி வேலையிழப்பு,  எதிர்கட்சிகளில் புதிதாக வளர்ந்துவரும் ஆம் ஆத்மியின் போட்டியால்  இந்த தேர்தலில்  குறைவான இடங்களையே பெரும்” என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் வழக்கம்போல கணிப்புகள் பொய்த்தன.

அமித்ஷா, மோடியின் தொடர் பிரசாரம், நீண்ட பேரணி போன்ற வியூகங்கள் உதவியிருக்கின்றன.  குஜராத் மக்கள் மோடி மீதான (கவனியுங்கள் பா.ஜ.க.வின் மீதில்லை) மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். 

மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு மாதம் ரூ 3000, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1000, ரூ. 2 லட்சம் வரை விவசாயக் கடன் தள்ளுபடி என ஆம் ஆத்மி அறிவித்தது. ஆனால், அது மூன்றாம் இடத்திற்கு வந்திருக்கிறது.

300 யூனிட் இலவச மின்சாரம், ரூ. 500க்கு எரிவாயு உருளை, 3 லட்சம் வரை வேளாண் கடன் தள்ளுபடி என்பவை காங்கிரசின் வாக்குறுதிகள். அது 17 இடங்களைப் பெற்றிருக்கிறது.

 பா.ஜ.க.வின் வாக்குறுதிகளில் இலவசம் பெரிய அளவில் இடம் பெறவில்லை. “படிப்பில் முதல் நிலையில் உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய கல்லூரி மாணவிகளுக்கு இலவச மின் ஸ்கூட்டர்” என்ற அறிவிப்பு இடம்பெற்றிருந்தது. ஆனால், பெரும்பாலும் அதன் வாக்குறுதிகள் உள்கட்டமைப்பு, வீட்டு வசதி என்பதாகவே இருந்தன.

 அரசியல் கட்சிகளின் இந்த வாக்குறுதிகளையும் தேர்தல் முடிவுகளையும் பார்க்கும் போது நமக்கு புரியும் ஒரு முக்கியமான விஷயம்....

இலவசங்கள் குஜராத் மக்களை வசீகரிக்கவில்லை.

எந்த ஜாதி பிரிவுகளில் இருந்தாலும் பொதுவாக குஜராத்திகளை வணிக சமூகம் (mercantile community) என்று அறியப்படுபவர்கள். இந்த தேர்தல்  முடிவுகள் அந்த வணிக சமூகத்துக்கு “இலவசங்களுக்கு மறைமுக விலை உண்டு” எனப் புரிந்திருக்கிறது.

“இந்த தேர்தலில் பா.ஜ.க. சந்தித்த புதிய சவாலான ‘ஆம் ஆத்மி‘யினால்தான் காங்கிரஸ் தன் நிலையை இழந்திருக்கிறது. அது பா.ஜ.க.விற்கு சாதகமான சூழலை உருவாக்கியிருக்கிறது” என்று சில ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஆனால், வெளியாகியிருக்கும் தொகுதி வாரியான  வாக்குகளின்  எண்கள் வேறு   செய்தியைச் சொல்லுகிறது. 

வாக்குகளின் எண்ணிக்கையின்படி ஆம் ஆத்மி கட்சி சுமார் நூறு தொகுதிகளில் டெபாசிட்கூடப் பெற்றிருக்காது என்று தெரிகிறது. (அதிகாரப் பூர்வ விபரம் இன்னும் வெளியாகவில்லை) . சில தொகுதிகளில் 1 சதவிகித வாக்குகள்கூடப் பெறவில்லை. பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ.க. 50 சதவிகிதத்துக்கும் மேலே, சிலவற்றில் 68 சதவிகிதம் வரை வாக்குகளைப் பெற்றுள்ளது. (சராசரி 52.5 விழுக்காடு.) அதாவது, ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுக்குக் கிடைத்திருக்கக்கூடிய ஓரிரு இடங்களை அது பறித்திருக்கலாமே தவிர, அதனால்  பா.ஜ.க.விற்கு எந்த பாதிப்பும் இல்லை.  ஆம் ஆத்மி அங்கே இல்லாவிட்டாலும் பெரிய மாற்றம் ஏதும் வந்திருக்காது என்பது தான் இந்த முடிவுகள் நமக்குச் சொல்லும் செய்தி.

 ஹிமாச்சல் பிரதேசம்

ஹிமாச்சல் பிரதேசத்தில். தனக்கு சாதகமற்ற களத்தை பா.ஜ.க. எதிர்கொண்டது. 1982லிருந்து அங்கு காங்கிரசும், பா.ஜ.க.வும் மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றன. இப்போது ஆட்சியில் இருப்பது பாஜக. எனவே இது காங்கிரசின் முறை.

 பா.ஜ.க. இங்கு இரண்டு சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது.  பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த எழுந்த கோரிக்கை  சரியாக கையாளப்படவில்லை. தேர்தலுக்கு முன்பும் இது குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.  இன்னொன்று சீட் கிடைக்காததால் கட்சியிலிருந்து வெளியேறி போட்டியிட்ட போட்டி வேட்பாளர்கள். மொத்தம் உள்ள 68 இடங்களிலும்  பா.ஜ.க.வேட்பாளர்களை இறக்கியது. அவர்களுக்கு எதிராக 21 இடங்களில்  பா.ஜ.க.வின் போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள். இதனால்  பா.ஜ.க. பெரும்பின்னடைவை சந்தித்திருக்கிறது. ஆனால்  வேறு சில மாநிலங்களில் செய்ததைப்போல கட்சி மாறிவரும் எம்.எல்.ஏ.க்கள் மூலம்  ஆட்சியில்  மாற்றமும் வரலாம்.

 இந்த தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்திகள்

டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபிலும் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, முதன் முறையாக குஜராத்தில் தனது கணக்கைத் தொடங்கியிருக்கிறது. “டெல்லியைத் தாண்டி பிற மாநிலங்களிலும் கால் பதிக்க வேண்டும்” என்பது ஆம் ஆத்மியின் திட்டம். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, அங்கும் ஆட்சியைப் பிடித்தது. வரும் காலங்களில் ஆம் ஆத்மி தன்  “தேசியகட்சி” என்ற அடையாளத்தை நிலைநிறுத்திக்கொண்டு   பா.ஜ.க.விற்கு பெறும்  சவாலாக உருவாகலாம்.

குஜராத்தில் பெற்றிருக்கும் வெற்றியை  பா.ஜ.க. நாட்டு மக்கள் தங்களுக்கு அளித்த வெற்றியாக கருதிக்கொள்ளக்கூடாது. மாநிலத் தேர்தல்களை அந்தந்த மாநிலங்களின் வாக்களிப்பு கலாசாரம் (Voting Culture) தீர்மானிக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை ஹிமாசலபிரதேசம்  தெரிவித்திருக்கிறது.

மக்களவைத் தேர்தலுக்கு முன் பா.ஜ.க. நாட்டின் பல மாநிலங்களில் எழுந்திருக்கும் எதிர்ப்பலைகளை புரிந்து கொண்டு  தனது கொள்கைகள் அணுகுமுறைகளை மாநிலங்களின் கலாசாரத்துக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலில்  மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும்.

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாம்!

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

டைப் A மற்றும் டைப் B இரண்டும் கலந்த ஆளுமைத்தன்மை உள்ளவர்களின் சிறப்பியல்புகள்!

SCROLL FOR NEXT