ஸ்பெஷல்

சகோதரனுக்காக களம் காண்கிறாரா பிரியங்கா காந்தி?

டேனியல் வி.ராஜா

தேசிய அரசியலில் மிகப்பெரும் பேசுபொருளாக தற்போது இருப்பவர் ராகுல் காந்தி தான். இந்திய ஒற்றுமைப் பயணத்தை (ஜூடோ பாரத்) முடித்து விட்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருந்தவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்திருக்கிறது குஜராத்தின் மாவட்ட நீதிமன்றம். 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது கர்நாடக மாநிலத்தில் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார். அப்போது  பேசிய  அவர், 'அனைத்துத் திருடர்களும் மோடி என்ற பெயரை பொதுவாக வைத்திருக்கிறார்கள்' என்ற பொருள்படும் படி பேசி இருக்கிறார். மோடி என்ற பெயரை அவதூறாகப் பேசியதாக குஜராத்தின் பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி என்பவர் வழக்குத் தொடர அந்த வழக்கின் அடிப்படையில் தீர்ப்பு இப்போது வழங்கப்பட்டிருக்கிறது.

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகாலம் தண்டனை உறுதியானவுடன் அவரது நாடாளுமன்ற பதவியைப் பறித்திருக்கிறது நாடாளுமன்றச் செயலகம். பதவியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ தண்டனை பெறும் பட்சத்தில் அவர்களின் தண்டனைக்காலம் முடிந்த பிறகு, அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இதனடிப்படையில் தண்டனைக் காலம் இரண்டு ஆண்டுகள், தகுதிநீக்கம் ஆறு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகள் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி உள்ளது.

தண்டனை அறிவிக்கப்பட்டவுடன் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக  இருந்த கேரளாவின் வயநாடு தொகுதி காலி ஆனதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ராகுல் காந்தியின் பதவி பறிப்பைக் கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நாடு முழுவதும் சத்தியாகிரகப் போராட்டத்தை ஒரு மாத காலத்திற்கு நடத்த திட்டமிட்டு நேற்று முன்தினம் (மார்ச் 27) முதல் நடத்தி வருகிறது. தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு சனி, ஞாயிறு விடுமுறை எடுத்துக் கொண்டு பின் பொறுமையாக இந்த போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது காங்கிரஸ்.

2004 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானார். மக்களவை உறுப்பினர் என்ற அடிப்படையில் அவருக்கு டெல்லியில் எண் 12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்டது. 2005 முதல் தற்போது வரை ராகுல் காந்தி அங்குதான் வசித்து வருகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கத்திற்குப் பிறகு வீட்டை காலி செய்ய மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்ப அதை ஏற்றுக் கொண்டிருகிறார் ராகுல் காந்தி.

30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்ற நிலையில் இதுவரை அதற்கான முயற்சிகளை காங்கிரஸ் தரப்பு மேற்கொள்ளவில்லை. அரசு பங்களாவை காலி செய்யவும் ராகுல் தயாராகி விட்டார். எனில் ராகுலின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கிறது?

பாஜகவிற்கு எதிரான பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இருந்தவர் ராகுல். கூட்டணிக் கட்சிகளால் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டவர் ராகுல். பல மாநிலங்களில் ஆட்சியை இழந்தும் சொற்ப எண்ணிக்கையில் வெற்றியும் பெற்று வரும் காங்கிரசை மீட்கப் போகும் மீட்பர் ராகுல்தான் என நம்பியிருந்தனர் காங்கிரஸ் தொண்டர்கள். இப்படிப்பட்ட சூழலில் எட்டாண்டுகள் அரசியலை விட்டு ஒதுங்க நினைக்கிறாரா ராகுல்? அல்லது அரசியல் அவருக்குப் போரடித்து விட்டதா?

வாய்த்துடுக்குத்தனமாக பேசுவதும் பின் பல்டி அடிப்பதையும், மன்னிப்பு கோருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ள ராகுல், 'மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை' என தெரிவித்திருக்கிறார்.

2016 ஆம் ஆண்டில் ராகுல் மேடை ஒன்றில் பேசும்போது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் காந்தியை கொன்றதாக கூறினார். வழக்கு நடைபெறும் போதோ காந்தியின் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என ஒருபோதும் குற்றம் சாட்டவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி பல்டி அடித்தார்.

2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பிரச்சார கூட்டம் ஒன்றில் ராகுல்காந்தி பேசும்போது, ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியே கூறிவிட்டதாகச் சொன்னார். இப்பேச்சுக்கு எதிராக, பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக ராகுல் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில், ‘உச்ச நீதிமன்றத்தை தவறாக மேற்கோள் காட்டியதற்கு நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்கிறேன். அப்படி நான் கூறிய கருத்து எதேச்சையானது’ என்று தெரிவித்தார். 

இப்படியாக தனது உயரம் என்ன, தனக்கு வழங்கப்பட்டிருக்கிற பொறுப்பு என்ன என்பதை உணராமல் பேசுவதும் பின்னர் அதற்கு விளக்கமளிப்பதும் ராகுலின் வாடிக்கையாகி உள்ளது. இந்த சூழல் தான் பிரியங்கா காந்தியை காங்கிரசிற்கான அடுத்த நட்சத்திரத் தலைவராக உருவாக்கி வருகிறது.

ராகுலுக்கு எதிராக தீர்ப்பு வந்த போது பிரதமரை மிகக் கடுமையாகச் சாடினார் பிரியங்கா காந்தி. 'இந்த நாட்டின் பிரதமர் ஒரு கோழை. என்னை சிறையில் அடையுங்கள். பணிய மாட்டேன், பின்வாங்க மாட்டேன், கொள்கையில் உறுதியாக இருப்பேன்' என்பது போன்ற காட்டமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி வருகிறார். இது உண்மையில் சகோதரப் பாசமா அல்லது அரசியலில் பெரிதும் நாட்டமில்லாமல் ஒதுங்க நினைக்கும் ராகுலின் இடத்தை அவர் பூர்த்தி செய்ய நினைக்கிறாரா?

மேல்முறையீட்டுக்கு போகாத நிலையில் வயநாடு தொகுதிக்கு பிரியங்கா காந்தியை வேட்பாளராக களமிறக்கத் திட்டமிட்டு வருகிறது காங்கிரஸ் தரப்பு. நேரு குடும்பத்தில் இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் ஏற்கனவே அரசியலில் பெரிதும் அறியப்பட்ட பெண் முகங்கள். இயல்பாகவே அரசியல் ரத்தம் ஊறும் பிரியங்கா காந்தி தனது தாயின் இடத்தை, பாட்டியின் இடத்தைப் பிடிப்பாரா? சமீபகாலமாக சோனியா காந்தி தனது அரசியல் ஓய்வைப் பற்றி யோசித்து வருகிறார். ராகுலின் தேர்தல் அரசியல் கேள்விக்குறியாகி உள்ளது. பிரியங்கா காந்தியைப் பொறுத்த வரை பொதுமக்களிடம் எளிதில் பழகும் தன்மை உடையவராக இருக்கிறார். எங்கு கோபப்பட வேண்டுமோ அங்கு தன் கோபத்தை காட்டமாக வெளிப்படுத்துகிறார். இதெல்லாம் அவருக்கான தகுதிகளாக மாறுமா?

ஒருவேளை பிரியங்கா வயநாடு தொகுதியில் போட்டியிட்டால் பாஜகவை எதிர்கொள்ளும் மாபெரும் தலைவராக உருவெடுப்பாரா? நேரு குடும்பத்தில் இருந்து இன்னொரு பெண் தலைவர் நாட்டுக்கு கிடைப்பாரா? 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை கரை சேர்க்கும் பொறுப்பு பிரியங்கா காந்தி கையில் ஒப்படைக்கப்படுமா? தனது பாட்டி இந்திராவை பிரதிபலிப்பாரா பிரியங்கா?

மிக அதிகமான சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள உத்திரபிரதேசத்தின் பொதுச் செயலாளராக தற்போது செயல்பட்டு வருகிறார் பிரியங்கா காந்தி. அவ்வப்போது அரசியலில் அவர் பெயர் அடிபடுவதும் பின்னர் அமைதியாகி விடுவதும் தான் அவரது இயல்பு. அவருடைய இந்த இயல்புக்கு காங்கிரசின் தலைமைப் பண்பு என்பது பொருந்துமா? மகா கணம் (சுமைதான்) பொருந்திய காங்கிரசின் தலைமையை பிரியங்கா தாங்குவாரா?

அரசியல் சதுரங்கம் யாருக்கு எதை கொடுக்கும் எதைப் பறிக்கும் என்பதை காலம் தான் முடிவு செய்யும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT