World Day to Combat Desertification and Drought 
ஸ்பெஷல்

நிலவளம் காக்க ஒன்றிணைவோம்... பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவோம்!

வித்யா குருராஜன்

பாலைவனமாதல் மற்றும் வறட்சியைத் எதிர்த்துப் போராடுவதற்கான உலக தினம் இன்று.. World Day to Combat Desertification and Drought - June 17

காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றுக்கு இணையான பிரச்சனையாகக் கருதப்படுவது நிலம் பாலைவனமாகுதல் அதாவது , அதீத வறட்சி. 1995ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் நிலம் பாலைவனம் ஆகுதல் மற்றும் வறண்டுபோதல் குறித்து ஒரு மாநாடு நடைபெற்றது. இந்தப் பிரச்சனை மீது உலக நாடுகளின் கவனம் ஈர்க்கப்பட்டு ஐநாவின் பொது சபையில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டிலிருந்து ஜூன் 17ஆம் தேதி பாலைவனம் ஆகுதல் மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான உலக தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பாலைவனமாகுதல் என்பதென்ன?

இயற்கையான மாற்றங்களினாலோ மனிதர்களின் செயல்பாடுகளினாலோ அல்லது இரண்டின் கலப்பினாலோ வளமான நிலம் காலப்போக்கில் பாலைவனமாக மாறுவதைத் தான் பாலைவனமாகுதல் – Desertification என்று குறிக்கிறார்கள்.

மண்ணை அதிகமாக சுரண்டுவது, காலநிலை மாறுபாடு ஆகியவற்றால் இத்தகைய வறண்ட நிலப்பகுதி பூமியில் படு வேகத்தில் அதிகரித்து வருவதாக ஐநா கவலை தெரிவிக்கிறது.

ஆப்பிரிக்காவின் சஹேல் பாலைவனப்பகுதி, ஆசியாவின் கோபி பாலைவனப்பகுதி மற்றும் மங்கோலியா, தென் அமெரிக்காவின் சில பகுதிகள், இந்தப் பிரச்சினையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள புவியியல் பகுதிகளாக அறியப்பட்டுள்ளன. இந்தியாவில் ராஜஸ்தானின் தார் பாலைவனப் பகுதியின் பரவலும் இதில் அடங்கும். ஆரவல்லி மலைத்தொடரால் தார்பாலைவனம் பெங்காலை எட்டாமல் இருக்கிறது என்கின்றனர் புவியியல் ஆய்வாளர்கள்.

இப்படிப்பட்ட உலர் நிலங்கள் பூமியின் நிலப் பகுதியில் 40 முதல் 41% வரை ஆக்கிரமித்திருப்பதாகவும் இந்த வறண்ட பகுதிகளில் சுமார் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்வதாகவும் கணக்கிட்டுச் சொல்கிறது ஐநா.

இதன் விளைவுகள் என்ன?

நிலம் வறண்டு பாலைவனம் ஆனால் அங்கே விவசாயம் செய்வதற்கில்லை. மிகக் குறைந்த அளவில் அல்லது சுத்தமாக இப்பகுதியில் தாவரங்கள் வளராது. இப்பகுதியில் வளரும் தாவரங்கள் பூமிக்குள் ஆழமாக வேரினை ஓட்டி நிலத்தடி நீரை உறிஞ்சி காலிசெய்துவிடும் தன்மை கொண்டவை. (சீமைக் கருவேலம், தைல மரம் போன்றவை) இதனால் இன்னும் வறட்சி ஏற்படும். இதன் காரணமாக தூசிப்புயல், உணவுப் பாதுகாப்பின்மை, உணவுப் பற்றாக்குறை, வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, குற்றச்செயல்கள் போன்ற தொடர் விளைவுகள் ஏற்படக்கூடும்.

தடுப்பதெப்படி?

தீவிர வேளாண்மைக்கு பதிலாக விரிவான வேளாண்மை முறையைக் கடைபித்தல் (அதாவது தொடர்ச்சியாக விவசாயம் செய்யாமல் மண்ணுக்கு அவ்வப்போது ஓய்வளித்தல்), பயிர் சுழற்சி முறையைக் கடைபிடித்தல், மண்ணின் தரத்தை மேம்மடுத்துதல், பாலைவனங்களைப் பசுமையாக்குதல், மேச்சலை ஒழுங்குபடுத்தி சிறப்பாக நிர்வகித்தல், மழை நீரை நிலத்தடிக்குள் செலுத்துதல், நீர் நிலைகளைப் பராமரித்தல், மரங்கள் நட்டு சமூகக்காடுகளை உருவாக்குதல், காடு அழிப்பைக் கட்டுப்படுத்துதல், மண் அள்ளுதலைத் தடுத்தல், மணல் குவாரிகளை முறைமைப்படுத்துதல், விளை நிலங்களில் குடியேறுதலைக் கண்காணித்தல், மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல், போன்றவற்றைக் கடைபிடிப்பதால் இந்தப் பிரச்சினையை ஓரளவு சமாளிக்கலாம் என்று ஐநா பட்டியலிட்டிருக்கிறது. 1995 முதல் இந்த தடுப்புமுறைகளைக் குறிவைத்து ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை அனுசரிப்பதற்காக ஒவ்வொரு கருப்பொருள் (Theme) கொடுத்துவருகிறார்கள்.

இவ்வாண்டின் தீம் : United for land. Our legacy. Our future.

நிலவளம் காக்க ஒன்றிணைவோம். பாரம்பரிய பசுமை நிலங்களை வருங்கால சந்ததியருக்கு விட்டுவைப்போம்.

அதிகப்படியான ஆயில் சருமத்தை கட்டுப்படுத்த சில தீர்வுகள்!

பாரம்பரிய மைசூர்பாக் மற்றும் மொறுமொறுப்பான ஓமப்பொடி!

மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம். மாற்றி யோசிப்போமா நண்பர்களே!

சிவனின் அம்சமான முனீஸ்வரன் பற்றித் தெரியுமா?

இலக்கை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

SCROLL FOR NEXT