Vidhya ramraj 
விளையாட்டு

பி.டி உஷாவின் 40 ஆண்டுகால சாதனையை சமம் செய்தார் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!

எல்.ரேணுகாதேவி

மிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டுதலில் 55.42 விநாடிகளில் இலக்கை அடைந்து, இந்திய வீராங்கனை பி.டி.உஷாவின் 40 ஆண்டுகால சதனையை சமன் செய்துள்ளார்.

இந்தியாவின் தங்கமங்கை என்றழைக்கப்படும் தடகள வீராங்கனை பி.டி.உஷா 1984ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல் நகரில் ஜூலை மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டார். அப்போது நடைபெற்ற 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் அவர் 55.42 விநாடிகளில் இலக்கை அடைந்தார். ஆனால் நூலிழையில் அவர் பதக்கம் வெல்ல முடியாமல் போனது. இதனைத்தொடர்ந்து 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் 55.42 விநாடிகளில் கடந்த பி.டி.உஷாவின் சாதனை நேற்றுவரை முறியடிக்கமுடியாமல் இருந்தது.

இந்நிலையில், இந்த சாதனையை தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் சீனாவில் நடைபெற்றுவரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டுதல் இறுதிப்போட்டிக்கு முன்பான தகுதி ஆட்டத்தில் பந்தய தூரத்தை 55.42 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார் வித்யா ராம்ராஜ். இதன்மூலம் முன்னாள் வீராங்கனை பி.டி.உஷாவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

இதன்மூலம் நாளை நடக்கவுள்ள 400 மீட்டர் தடை தாண்டுதல் இறுதி போட்டிக்கு வித்யா ராம்ராஜ் முன்னேறி உள்ளார். இதனால் பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்தது மட்டுமல்லாமல், நாளை நடைபெறவுள்ள இறுதிபோட்டியில் வித்யாராம்ராஜ் புதிய சாதனை படைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த வாரம் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வித்யா ராம்ராஜ் 55.43 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vidhya ramraj

கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான வித்யா ராம்ராஜ், தடகளத்தில் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவரின் சகோதரி நித்யா இந்தியாவுக்காக ஆசிய போட்டிகளில் 100 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார். ஒரே வீட்டில் இருந்து இரட்டை சகோதரிகள் இருவரும் இந்தியாவுக்காக ஆசிய போட்டிகளில் பங்கேற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவயதில் இருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட தடகள வீராங்கனைகளான இரட்டை சகோதரிகள் வித்யா ராம்ராஜ், நித்யாராம்ராஜ் ஏழாம் வகுப்பு முதல் அரசு விளையாட்டு விடுதியில் தங்கி படிக்கத் தொடங்கியுள்ளனர். கல்லூரியில் படித்த போது தேசிய சீனியர் போட்டியில் வென்று, விளையாட்டு ஒதுக்கீட்டில், 2018ல் வருமான வரித்துறையில் மல்டி டாஸ்கிங் கிளார்க் பணியை பெற்றுள்ளார் நித்யா. அதேபோல், தேசிய அளவிலான பல போட்டிகளில் தங்கம் வென்று, விளையாட்டு ஒதுக்கீட்டில், 2022ல் இந்திய ரயில்வே துறையில் சீனியர் கிளார்க் ஆக வேலைக்குச் சேர்ந்துள்ளார் வித்யா.

Vidhya ramraj, Nithya Ramraj

பெற்றோர்களின் ஒத்துழைப்பு மற்றும் தங்களுடைய கடின முயற்சியால் தடகள போட்டியில் இரட்டை சகோதரிகளான வித்யா மற்றும் நித்யா ராம்ராஜ் தற்போது ஆசிய போட்டிவரை முன்னேறி உள்ளனர். இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்வதற்காக தடகள வீராங்கனைகளான வித்யா மற்றும் நித்யா இருவரும் தினமும் ஆறு மணிநேரம் தீவிர பயிற்சி மேற்கொண்டுவருவதாக அவர்களின் பயிற்சியாளர் நோபல் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT