ராய்ப்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரிங்கு சிங்கின் அதிரடி பேட்டிங் மற்றும் அக்ஸர் படேலின் சிறப்பான பந்துவீச்சு மூலம் இந்தியா வெற்றிபெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.
ஒரு கட்டத்தில் விக்கெட் நஷ்டமின்றி 50 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, 14 பந்துகளில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. முதலில் ஜெய்ஸ்வால் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் இருவரும் அவுட்டானார்கள்.
இதையடுத்து களத்தில் இறங்கிய ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வேட் உடன் இணைந்து ஆடினார். இருவரும் சேர்ந்து 31 பந்துகளில் 41 ரன்களை குவித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். ருதுராஜ் அவுட்டானபின் ஜிதேஷ் சர்மாவும் ரிங்குவும் ஆட்டத்தை நகர்த்திச் சென்றனர். ஜிதேஷ் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். ரிங்கு சிங் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 46 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இறுதியில் இந்திய 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 174 எடுத்தது. பேட்டிங்கில் ரிங்கு சிங், சிறப்பாக ஆடினார் என்றால் பந்துவீச்சில் அக்ஸர் படேல் அதிரடி காட்டினார். 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் இங்லிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இல்லை என்றாலும் 175 ரன்கள் எடுப்பது என்பது பெரிய விஷயமல்ல.
தொடக்கத்தில் டிராவிஸ் ஹெட், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான முகேஷ்குமார், தீபக் சாஹர் பந்துகளை அடித்து ஆடினார். முதல் மூன்று ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா 40 ரன்களை எடுத்தது.
இதையடுத்து சுழற்பந்து வீச்சாளர்களான அக்ஸர் படேலும், ரவி விஷ்ணுவும் களத்தில் இறங்கினர். அக்ஸர் படேல் நான்கு ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ரவி விஷ்ணோய் அதே நான்கு ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றினார். இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்து வீச்சு மூலம் ஆஸ்திரேலியா ரன்களை குவிக்காமல் கட்டுப்படுத்தினர்.
இறுதியில் ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றி டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தொடரை வென்றதன் மூலம் உற்சாகத்தில் உள்ளனர். 2024 டி20 உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணி உற்சாகமாக தயாராகி வருவதையே இந்த போட்டிகள் காட்டுகின்றன.