இந்திய ஹாக்கி அணி 
விளையாட்டு

ஆசிய ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தி இறுதிச் சுற்றில் நுழைந்தது இந்தியா!

ஜெ.ராகவன்

மூன்று முறை சாம்பியன்ஷிப் கோப்பை வென்ற இந்திய ஹாக்கி அணி, ஆசிய கோப்பைக்கான அரையிறுதியில் ஜப்பான் அணியை 5 - 0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிச்சுற்றில் நுழைந்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி, மலேசிய அணியை இன்று (சனிக்கிழமை) எதிர்கொள்கிறது.

இந்தியா - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பரபரப்பாகவே தொடங்கியது. இரு அணிகளுமே தொடக்கத்தில் இருந்தே தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஆடின. ஆனால், போகப்போக இந்திய அணி, ஜப்பானை பின்னுக்குத் தள்ளியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் போட முயன்றார். ஆனால், அவரது முயற்சியை ஜப்பான் கோல் கீப்பர் யோஷிகவா முறியடித்துவிட்டார்.

முதல் கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. ஹர்திக் தனக்குக் கிடைத்த பந்தை கோல் பகுதியை நோக்கி அடித்தார். ஆனால், அதை கோலுக்கு அனுப்ப அந்த இடத்தில் யாரும் இல்லை. இதேபோல, ஜப்பானின் யமடா, சக வீரர் தகாடே தட்டிக்கொடுத்த பந்தை கடத்திச் சென்றார். ஆனாலும், கோல் போட முடியவில்லை.

இரண்டாவது கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளுமே முனைப்புடன் விளையாடின. ஹர்திக் மற்றும் சுமித் ஆகிய இரு முன்னிலை ஆட்டக்காரர்களும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பந்தை வேகமாகக் கடத்திச் சென்றனர். அதேநேரத்தில் இந்திய அணி வீரர் அக்ஷதீப் பந்தை அவர்களிடமிருந்து பெற்று மிக நேர்த்தியாக ஒரு கோல் போட்டார். இதையடுத்து, இந்தியா 1 - 0 என முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் ஜப்பானின் தற்காப்பு ஆட்டத்தை முறியடிக்கும் வகையில் ஆக்ரோஷத்துடன் ஆடினர். அப்போது கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மன்ப்ரீத் சரியாகப் பயன்படுத்தி கோல் அடித்தார். இடைவேளைக்கு முன்னதாக இந்தியா 2 - 0 என்று முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. மன்ப்ரீத் மீண்டும் ஒரு கோல் போட, இந்தியா 3 - 0 என முன்னிலை பெற்றது.

இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியபோது, இந்திய அணியினர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி ஆடி ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். மூன்றாவது கால் பகுதி ஆட்டத்தில் இந்தியா பரபரப்பாக விளையாடியது. மன்ப்ரீத் சிறப்பாக பந்தை கடத்திச் சென்று அமித்துக்கு அனுப்பினார். அவர் மின்னல் வேகத்தில் அதை கோலுக்கு அனுப்பினார். ஆனால், ஜப்பான் கோல்கீப்பர் யோஷிகோவா அதைத் தடுத்துவிட்டார். அடுத்து, குர்ஜந்துக்கு கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது. ஜப்பான் கோல்கீப்பர் அதையும் முறியடித்துவிட்டார்.

இருந்தாலும் இந்தியா தனது முயற்சியில் தளரவில்லை. மன்ப்ரீத் சிங் பந்தை கடத்திச் சென்று ஜப்பானிய தற்காப்பு ஆட்டக்காரர்களின் முயற்சியை முறியடித்து பந்தை சுமித்துக்கு அனுப்பினார். அவர் அதை தூக்கி அடித்தபோது பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. எனினும்  ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் சுமித் யாரும் எதிர்பாராத நிலையில் ஒரு கோல் போட்டார் (4 - 0). இறுதிகட்ட போட்டியில் இந்திய அணியினர் மேலும் உத்வேகத்துடன் விளையாடினர்.

ஆட்டம் இறுதிகட்டத்தை நெருங்கியபோது ஆடுகளத்தின் நடுவில் இருந்த ஹர்மன்ப்ரீத், பந்தை ஷம்ஷெருக்கு அனுப்பினார். அதை அவர் ஜப்பானிய தற்காப்பு ஆட்டக்காரர்களையும் மீறி கார்திக்கு அனுப்ப, அவர் அதை கோலாக்கினார். இதையடுத்து இந்தியா 5 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

அதன் பிறகு ஜப்பான் பெரும் முனைப்பு காட்டி விளையாடிய போதிலும், இந்திய அணியின் வீர்ர்களைக் கடந்து பந்தை எடுத்துச் செல்ல அவர்களால் முடியவில்லை. அந்த அளவுக்கு இந்தியா பாதுகாப்பு அரண் அமைத்திருந்தது. இந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியில் இந்தியா 5 - 0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இன்றைய இறுதிப் போட்டியில் இந்தியா, மலேசிய அணியைச் சந்திக்கிறது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT