சீனாவின் ஹாங்ஸு நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. வெள்ளிக்கிழமை 9 பதக்கங்களை வென்ற இந்தியா, 100 பதக்கங்களை கைப்பற்றி வரலாறுபடைக்க உள்ளது.
இந்திய மகளிர் ஹாக்கி, பாட்மின்டன், வில்வித்தை, பிரிட்ஜ், செபக்தக்ரெளவ், மல்யுத்தம் என தொடர்ந்து பதக்கத்தை குவித்து வருகின்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன்சியா மற்றும் சோ ஊய் யிக் ஜோடியை 21-17, 21-12 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு தகுதிபெற்றது.
இறுதிப் போட்டியில் சாத்விக்- சிராக் ஜோடி, கொரியாவின் சோய் சோல் கியு மற்றும் கிம் வான் ஹு ஜோடியை எதிர்கொள்கிறது.
ஹாக்கி போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாட இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. 1966, 1998 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய போட்டியில் இந்திய ஆடவர் அணி இப்போது தான் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நான்கு ஆண்டுகளுக்கு முன் ஜாகர்த்தாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றது.
வில்வித்தை குழு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அதனு தாஸ், தீரஜ் பொம்மதேவரா மற்றும் பிரபாகர் துஷார், கொரிய அணியிடம் தோல்வி அடைந்த நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்றனர். மகளிர் பிரிவில் அங்கீதா பக்த், பஜன் கெளர், சிம்ரஞ்சித் கெளர் ஆகியோர் கொண்ட குழு அரையிறுதியில் கொரிய அணியிடம் தோல்வியுற்ற நிலையில் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
மல்யுத்தப் போட்டியில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்றுள்ளது. ஆடவர் (57 கி.) பிரிவில் அமன், மகளிர் பிரிவில் (62 கி.) சோனம், 76 கி. பிரிவில் கிரன் மூவரும் வெண்கலம் வென்றனர். ஜாகர்த்தா போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியா, 65 கி. எடை பிரிவில் போட்டியிட்டு ஜப்பான் வீர்ரிடம் தோல்வி அடைந்து வெறும் கையுடன் திரும்பினார்.