சீனாவின் ஹாங்ஸு நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள வீரர்களான பாருல் சவுத்ரி மற்றும் அன்னு ராணி தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தடகளப் போட்டிகளில் ஓட்டப்பந்தய வீராங்கனையான பாருல் செளதுரி 5000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தினார். ஏற்கெனவே ஸ்டீபிள் சேஸ் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
பத்து சுற்றுகள் கொண்ட போட்டியில் தொடக்கத்தில் பாருல் நான்காவது இடத்திலேயே இருந்தார். அப்போது ஜப்பான் வீராங்கனை ரிரிகா ஹிரோனகா முதலாவது இடத்தில் இருந்தார்.
கடைசி 50 மீட்டர் தொலைவு வரை பாருல், ரிரிகாவைவிட பின்தங்கி இருந்தார். இறுதிக்கட்டத்தில் ரிரிகா சற்று களைத்திருந்த நேரத்தில் பாரூல், தனது ஆற்றல் முழுவதையும் வெளிப்படுத்தி முதலில் வந்து வெற்றியை கைப்பிடித்தார்.
மகளிர் ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னுராணி தங்கம் வென்றார். இது அவரது வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும் மொத்தம் 62.92 மீட்டர் ஈட்டி எறிந்து அவர் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். சர்வதேச போட்டிகளில் அவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். முதல் இரண்டு வாய்ப்புகளில் அவர் முறையே 56.99 மற்றும் 61.28 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்தார். எனினும் கடைசி முயற்சியில் அவர் 62.92 மீட்டர் ஈட்டி எறிந்து சாதனை படைத்தார்.
குத்துச்சண்டை போட்டியில் 75 கிலோ எடைப் பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றார். மேலும் பாரீஸில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில் லவ்லினா, தாய்லாந்தின் பைஸன் மனீகோனை வெற்றிகண்டார்.
குத்துச்சண்டை போட்டியில் 54 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் ப்ரீத்தி பவார், சீனாவின் யுவான் சாங்கிடம் தோல்வி அடைந்த போதிலும் வெண்கலப்பதக்கம் வென்றார். ஆடவர் பிரிவில் 92 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் நரேந்தர், கஜகஸ்தான் வீரர் குன்கபயேவிடம் தோல்வி அடைந்த போதிலும் வெண்கலம் வென்றார்.
ஆடவர் மும்முறை தாண்டும் போட்டியில் இந்திய தடகளவீரர் பிரவீண் சித்ரவேல் வெண்கலம் வென்றார்.
ஆடவர் டெக்காத்லான் போட்டியில் இந்திய தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் மற்றும் 800 மீட்டர் ஓட்டத்தில் முகமது அப்ஸல் இருவரும் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் இந்தியாவின் வித்யா ராம்ராஜி வெண்கலம் வென்றார்.
இதனிடையே இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் நேபாளத்தை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் அரையிறுதியை எட்டியது.
இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஹாங்காங்கை 13க்கு 0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைவதை உறுதிசெய்தது. இந்திய வீராங்கனைகள் வந்தனா கடாரியா, துணை கேப்டன் தீப் கிரேஸ் எக்கா மற்றும் தீபிகா மூவரும் ஹாட்ரிக் அடித்தனர்.