மும்பையில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வென்று வரலாறு படைத்தது.
டெஸ்ட் தோல்விக்குப் பின் பேட்டியளித்த ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிஸா ஹீலே, இந்தியாவுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றால் போதாது. மேலும் சில டெஸ்ட் போட்டிகள் ஆடவேண்டும். அப்படிச் செய்தால் அது இரு அணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வென்றது.
கடந்த 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் ஆஸ்திரேலிய மகளிர் அணி பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டியாகும் இது. ஆனால், ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றியை கைப்பிடித்தது. சமீபத்தில் மும்பையில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வெற்றி கொண்டது. இப்போது மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடி ஆஸ்திரேலிய அணியையும் தோற்கடித்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள், டி20 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கின்றன. இவை டிசம்பர் 28 முதல் ஜனவரி 9 வரை நடைபெறும்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே குறைந்தபட்சம் மூன்று டெஸ்ட் போட்டிகளாவது நடைபெற வேண்டும். அப்போதுதான் போட்டியில் ஒரு விறுவிறுப்பு இருக்கும். அணியினர் சிவப்பு நிற பந்துகளிலும் விளையாட முற்பட வேண்டும் என்று அலிஸ்ஸா ஹீலே கூறினார்.
3 ஒருநாள் போட்டிகளுக்கு பதிலாக மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கலாம் என்றார் ஹீலே.
மும்பை டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 219 ரன்கள் எடுத்தது. இந்தியா 406 ரன்கள் குவித்து 187 ரன்களை லீடாக பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 261 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இதையடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வென்றது.
இந்திய மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஜெமீமா சிறப்பாக விளையாடினர். இந்தியா-ஆஸ்திரேலியா இடையே அதிக டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து பி.சி.சி.ஐ.- கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் ஹிலே.