காமன்வெல்த் போட்டிகளை 2026 ஆம் ஆண்டு நடத்துவதிலிருந்த விலகிக் கொள்வதாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் தெரிவித்துள்ளது. போட்டிகளை நடத்துவதற்கான செலவு தொகை அதிகரிக்கும் என்ற காரணத்தாலேயே விலகிக் கொண்டதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக விக்டோரியா மாநிலத் தலைவர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறுகையில் தொடக்கத்தில் காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கு 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. இப்போது நடத்திய ஆய்வில் 7 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் செலவாகும் என்று தெரியவந்துள்ளது. இது ரொம்ப அதிகம் என்பதால் போட்டியை நடத்துவதிலிருந்து பின்வாங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுக்க வேண்டியதாயிற்று. உண்மையில் ஒரு விளையாட்டுப் போட்டிக்கு 7 பில்லியன் டாலர் செலவிடுவது அதிகமானது. அந்த தொகையை செலவிட நாங்கள் தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.பள்ளிகள் கட்டுவது, மருத்துவமனை கட்டுவது போன்று இது ஒன்றும் முக்கியமானதல்ல. விளையாட்டுப் போட்டிக்கு 2 பில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பிட்டிருந்தோம். இப்போது செலவு மூன்று மடங்கு அதிகரிக்கும் என தெரியவந்துள்ளதால் கைவிட முடிவு செய்தோம் என்றார்.
விக்டோரியா மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்த முடியாது என்பது போட்டி குழுவினருக்கு தெரிவித்துவிட்டோம். இதுதொடர்பான ஒப்பந்த்தை முறித்துக் கொள்வதாகவும் கூறிவிட்டோம் என்று அவர் மேலும் கூறினார்.
எங்களால் போட்டிகளை நடத்த முடியாத நிலையில் மெல்போர்னில் நடத்த முடியுமா என்று பார்த்தோம். ஆனாலும் சரிபட்டு வரவில்லை. எனினும் ஒதுக்கப்பட்ட 2 பில்லியன் ஆஸ்திரேலியன் டாலரை விக்டோரியா மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குச் செலவிடப்படும் காமன்வெல்த் போட்டி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதால் ஏற்பட்ட நஷ்டம் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை. எனினும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது என்று மட்டும் அவர் கூறினார்.
காமன்வெல்த் போட்டியை நடத்துவதிலிருந்து விக்டோரியா விலகிக் கொள்வது தொடர்பான முடிவு தமக்கு தாமதமாகவே தெரிவிக்கப்பட்டதாக காமன்வெல்த் போட்டிகளின் ஆஸ்திரேலிய பிரிவு தலைவர் பென் ஹுஸ்டன் தெரிவித்துள்ளார். இந்த முடிவு தமக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் ஆஸ்திரேலியாவின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக காமன்வெல்த் போட்டிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. போட்டியை நடத்துவதிலிருந்து விலகிக் கொள்வதாக விக்டோரியா திடீரென அறிவித்துவிட்டது. எங்களிடம் ஆலோசனை கூட கலக்கவில்லை என்று சம்மேளனம் தெரிவித்துள்ளது.
காமன்வெல்த் போட்டியை நடத்துவது குறித்து விக்டோரியாவுடன் 14 மாதங்களுக்கு முன்னர்தான் ஓப்பந்தம் போடப்பட்டது. முதலில் போட்டியை நடத்த போதுமான நிதி ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்த விக்டோரியா மாநிலம் இப்போது ஏன் பின்வாங்கியது என்று தெரியவில்லை என்று சம்மேளனம் கூறியுள்ளது.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு திட்டமிட்டபடி காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் 54 நாடுகளைச் சேர்ந்த 4,000 அதெலடிக் வீர்ர்கள் பங்கேற்பார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் பிர்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.