விளையாட்டு

ஓய்வுபெறும் முடிவை திரும்பப் பெற்றார் பென் ஸ்டோக்ஸ்!

ஜெ.ராகவன்

ருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவை திரும்பப் பெற்றார் உலகக் கோப்பையை வென்ற ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ். ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

வரும் செப்டம்பர் மாதம் சொந்த மண்ணில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள 4 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியின் 15 வீரர்கள் கொண்ட தற்காலிகப் பட்டியலிலும் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றுள்ளார்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மீண்டும் விளையாட பென் ஸ்டோக்ஸ் முடிவு செய்து அணிக்குத் திரும்பியுள்ளதை ஒவ்வொரு ரசிகரும் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள் என்று நம்புவதாக இங்கிலாந்து அணியின் மூத்த தேர்வாளர்களில் ஒருவரான லூக் ரைட் தெரிவித்துள்ளார்.

‘நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி வீரர்களே, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவார்கள்’ என்று ரைட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் கடந்த 2022 ஜூலை மாதம் அறிவித்திருந்தார். அதிக பணிச்சுமை மற்றும் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் போட்டி கேப்டனாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆட்டத்தில் கவனம் செலுத்தவேண்டியிருந்ததன் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியிருந்தார்.

2019 உலகக் கோப்பையில், நியூஸிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் போட்டி விறுவிறுப்பாக அமைந்திருந்தது. இந்தப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 84 ரன்களை குவித்திருந்தார். இவரது அதிரடி ஆட்டம் இங்கிலாந்து முதன் முறையாக உலகக் கோப்பையை வெல்ல உதவியது.

ஸ்டோக்ஸின் அதிரடி ஆட்டம் அத்துடன் நிற்கவில்லை. 2022ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கும் அவர் முக்கியப் பங்காற்றினார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் 49 பந்துகளை சந்தித்து 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு ஓவர் பாக்கி இருக்கும் நிலையில் 138 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து. டி20 மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் உலக கோப்பையை இங்கிலாந்து வெல்வதற்கு பென் ஸ்டோக்ஸ் முக்கியக் காரணமாக இருந்தார்.

இந்தியாவுடன் ஏற்கெனவே விளையாடியது மற்றும் அவரது திறமை, அனுபவங்கள்  மீண்டும் ஒருநாள் போட்டிக்கு பென் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு வலு சேர்ப்பதாகவே இருக்கும்.

2011ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானதிலிருந்து பென் ஸ்டோக்ஸ் இதுவரை 105 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மூன்று சதம் உள்பட, மொத்தம் 2,924 ரன்களை எடுத்துள்ளார். மேலும் 74 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் தம்மை ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்றும் நிரூபித்துள்ளார்.

இங்கிலாந்து - நியூஸிலாந்து நாடுகளுக்கிடையே நடைபெறும் ஒருநாள் போட்டித் தொடர் அட்டவணை:

முதல் போட்டி செப்டம்பர் 8ம் தேதியும் (ஸோஃபியா கார்டன், கார்டிஃப்), 2வது போடி செப்டம்பர் 10ம் தேதியும், (செளத்ஹாம்டனில் அகியால் பெளல்), 3வது போட்டி செப்டம்பர் 13ம் தேதி (லண்டனில் கியா ஓவல் மைதானத்திலும்) கடைசி மற்றும் நான்காவது ஒருநாள் போட்டி லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் செப்டம்பர் 15ம் தேதியும் நடைபெறுகிறது.

அயர்லாந்துடன் 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இங்கிலாந்து விளையாட உள்ளது. 2023 அக்டோபர் 5ம் தேதி ஆமதாபாதில் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியினர் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கின்றனர்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT