டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பலரும் ஹார்திக் பாண்டியா குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இலங்கை வீரர் ஒருவர், ஹார்திக்கிற்கு மரியாதை என்பதே தெரியவில்லை. ஆகையால்தான் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் அடுத்த டி20 கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பொறுப்பிற்கு சூரிய குமார் யாதவ் வந்திருக்கிறார். மும்பை அணியின் கேப்டனாக ஹார்திக் பதவியேற்றதிலிருந்து பல்வேறு விதமான சவால்களை எதிர்க்கொண்டு வருகிறார் பாண்டியா. அதன்பின்னர் சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியின் வெற்றிக்கு பின்னரே, ஹார்திக், இந்திய ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
ஆனால், இப்போது கேப்டன் மாற்றப்பட்டது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. இதுகுறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஸில் அர்னால்ட் பேசியுள்ளார்.
"சூரியகுமார் மற்றும் ஹார்திக் என இருவருமே திறமை வாய்ந்த வீரர்களாக இருக்கிறார்கள். ஆனால் களத்தில் செயல்படும்போது இருவருமே வித்தியாசமாக செயல்படுகிறார்கள். டி20 பொறுத்தவரை சூரியகுமார் தமக்கு தெரிந்த ஒரே வகையில் தான் விளையாடுவார்.
இதேபோன்று போட்டியை எப்படி அணுக வேண்டும் என்பதில் சூரியகுமார் தெளிவாக இருப்பார். ஹார்திக்கும் இதே திறனை ஏற்கனவே காட்டியிருக்கிறார். ஆனால் ஐபிஎல் தொடரின் போது ஹார்திக் பாண்டியாவால் மற்ற வீரர்களின் மரியாதையை சம்பாதிக்க முடியவில்லை. ஹார்திக் தனிமையிலே இருந்தது போல் தெரிந்தது.
இந்த ஒரே காரணத்தினால் மட்டுமே பிசிசிஐ, ஹார்திக் பாண்டியாவை விட்டுவிட்டு சூரியகுமார் யாதவை தேர்ந்தெடுத்தது. ஒரு கேப்டனாக இருக்கும் நபர் அனைவரையும் ஒருங்கிணைத்து அணியை சரியான வழியில் வழிநடத்த வேண்டும். அணியை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
அப்போதுதான் வெற்றி என்ற ஒரு திசை நோக்கி அணி செல்லும். இதற்காக நான் சொன்னதெல்லாம் ஹார்திக் பாண்டியா தலைமையில் நடக்கவில்லை என அர்த்தம் கிடையாது. தற்போது சூரியகுமார் யாதவுக்கு நல்ல ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை அவர் சரியாக பயன்படுத்தி ஒரு கேப்டனாக தம்மால் என்ன செய்ய முடியும் என்பதை காட்ட வேண்டும்.” என்று பேசியிருக்கிறார்.