சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியின்போது ரிஷப் பண்ட் முழங்காலில் காயம் ஏற்பட்டது. அது ஒரு நாடகம், உண்மையில் எனக்கு காயம் ஏற்படவில்லை என்று அவரே தற்போது கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி ரோகித் ஷர்மா தலைமையில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில்கூட தோல்வி அடையாமல் அனைத்திலும் வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது. இறுதிபோட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி மிடில் ஆர்டரில் முழு ஃபார்மில் விளையாடியது.
அப்போது 24 பந்துகளுக்கு 26 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது. இதனால், இந்திய அணி இந்த உலகக்கோப்பையிலும் அவ்வளவுதான் என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் எண்ணினர். அப்போதுதான் ரிஷப் பண்ட் முழங்காலில் காயம் ஏற்பட்டது. பிஸியோ வந்து அவரை அழைத்துச் சென்று சிகிச்சைப் பார்த்தார். இதில் சிறிது நேரம் சென்றது. பின் மீண்டும் ஆட்டம் ஆரம்பமானது. ஆனால், தென்னாப்பிரிக்கா அதன் ஃபார்மை இழந்தது. விக்கெட்டுகள் தொடர்ந்து விழத் தொடங்கின. இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி உலக கோப்பையை தட்டித் தூக்கியது.
ஆனால், ரிஷப் பண்ட்டின் அந்த முழங்கால் காயம் பொய், அது ஒரு நாடகமாம். ஒரு இடைவெளி எடுத்து தென்னாப்பிரிக்காவின் ஃபார்மைத் தடுக்கவே போட்ட ஒரு நாடகம் என்று ரிஷப் பண்ட் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசியதைப் பார்ப்போம், “இது போல மீண்டும் ஒரு உலகக் கோப்பை இறுதிப்போட்டி தருணம் எப்போது வரும் என்று நினைத்தேன். அதனால் நான் முழங்காலில் காயம் ஏற்பட்டது போல நடித்து அருகில் இருந்த பிசியோவை உங்களது நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், நேரத்தை வீணடித்துக் கொண்டே இருங்கள் என்று கூறினேன்.
பிசியோ நான் நலமா என்று கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் நான் அவரிடம் எனக்கு ஒன்றும் இல்லை நான் காயம் ஏற்பட்டது போல நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினேன். இதுபோல இது அனைத்து நேரங்களிலும் வேலை செய்யும் என்று கூற முடியாது. ஆனால் சில நேரங்களில் இது வேலை செய்தால் உங்களுக்கு வேறு எதுவும் தேவையே இருக்காது.” என்று பேசினார்.
ஆட்டத்தின் திசையையும் வேகத்தையும் மாற்றவே ரிஷப் பண்ட் இப்படி செய்திருக்கிறாராம். இதுபற்றி உங்கள் கருத்து என்ன??