ICC Women's T20 World Cup 
விளையாட்டு

பரிதாபமாக தோற்ற பாகிஸ்தான்! இங்கிலாந்துக்கு முற்று புள்ளி வைத்த மேற்கிந்தியத் தீவுகள்!

ராஜமருதவேல்

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான லீக் சுற்றில் நியூசிலாந்து அணியுடன் பாகிஸ்தான் அணி மோதியது. இப்போட்டியில் 'பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைத்திருக்கும். பாகிஸ்தான் மகளிர் அணிக்கு இந்தியாவை அரையிறுதிக்கு தகுதி பெற விடாமல் தடுக்கும் தீய எண்ணத்தில் எல்லாம் அவர்கள் விளையாட வில்லை'. உண்மையில் பாவம், அவர்களுக்கு வெற்றி பெறும் அளவுக்கு திறமை இல்லை என்பதே உண்மை.

முதலில் பேட்டிங் பிடித்த நியூசிலாந்து அணியை அதிரடியாக ஆட விடாமல் பாகிஸ்தான் அணி சிறப்பாக பந்து வீசியது. சுசி பேட்ஸ் 28 ரன்களும் ஜார்ஜியா 17 ரன்களும் எடுத்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் 20 ஓவர் வரை தாக்கு பிடித்தது நியூசிலாந்து அணி. இறுதியாக ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 110 / 6 ரன்களை எடுத்தது. நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த எளிமையான இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மிகப் பரிதாபமாக இருந்தது. கேப்டன் சனா பாத்திமாவும் (21) துணை கேப்டன் முனிபா அலி (15) மட்டுமே இரட்டை இலக்கத்தை கடந்து ரன் அடித்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். 4 பேட்ஸ் உமன்கள் 0 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இறுதியில் மிக பரிதாபமாக 56 ரன்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து தோற்றது பாகிஸ்தான். அமெலியா 3 விக்கட்டுக்களையும் ஈடன் கார்சன் 2 விக்கட்டுக்களையும் விழ்த்தினார்.

ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பை போட்டிக்கான மற்றொரு லீக் சுற்றில் இங்கிலாந்து அணியுடன் மேற்கிந்திய அணி மோத இருந்தது. தொடர் வெற்றியோடு வலம் வந்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. நல்ல ஃபார்மில் இருந்த இங்கிலாந்து அணி நிதானமாக ரன்களை சேர்க்கத் தொடங்கியது.

டேனியல் வியாட் 16 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அவரை தனியே விட விருப்பமில்லாமல் ஆலிஸ் கெப்ஸியும் வந்த உடனே 2 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக அவர்களுக்கு துணைக்கு மையா புர்ச்சரும் வெளியேற இங்கிலாந்து அணியின் மனநிலை நொறுங்கியது. நடாலி ஸ்கீவர் (57) மற்றும் ஹீதர் (21) ஜோடி கவுரவமான ரன்களை எட்ட உதவியது. ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 141/7 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் அஃபி பிளெட்சர் 3 விக்கெட்டுகளையும், மேத்யூஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இலக்கை துரத்திய மேற்கிந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மேத்யூஸ் மற்றும் கியானா ஜோசப் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 102 ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப்பை இருவரும் பதிவு செய்தனர். மேத்யூஸ் 50 ரன்களும், கியானா 52 ரன்களும் எடுத்தனர். அடுத்தடுத்து இவர்கள் அவுட் ஆனாலும் வெற்றிக்கு தேவையான இலக்கை முக்கால்வாசி அடைந்திருந்தனர். அடுத்து வந்த டியான்டிரா 27 ரன்கள் எடுத்தார். ஆட்ட நேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 18வது ஓவரில் 4 விக்கட் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்தை உலகக் கோப்பை போட்டியிலிருந்தே வெளியேற்றியது.

அக் 17, இன்று நடைபெறும் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்க அணிகளும் மோத உள்ளன. நாளை நடைபெறும் அரையிறுதியில் நியூசிலாந்தும் மேற்கிந்திய அணிகளும் மோத உள்ளன.

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

SCROLL FOR NEXT