ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்தியா டக்ளஸ் லீவில் முறையில் 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரையும் இந்தியா கைப்பற்றியது. இனி இந்தியா உலகக் கோப்பை 2023 போட்டியில் ஒருநாள் போட்டியில் நெ.1 என்ற பெருமையுடன் நுழைகிறது.
இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பந்துவீச்சை தேர்ந்தெடுத்து இந்தியாவை முதலில் ஆடவைத்தார்.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 399 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் களம் இறங்கிய ருதுராஜ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு கூட்டாக 200 ரன்கள் எடுத்தனர்.
சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அதிரடியாக ஆடி சதம் எடுத்தனர். கில் 104 ரன்கள் எடுத்திருந்தபோது கிரீன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் எடுத்து அபோட் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து கே.எல்.ராகுல், இஷான் கிஷன் இருவரும் களம் இறங்கினர் ராகுல் 52 ரன்களும் இஷான் கிஷன் 31 ரன்களும் எடுத்திருந்தபோது அவுட்டானார்கள்.
இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் களத்தில் இறங்கி அதிரடி ஆட்டத்தை நடத்தினார். அவர் 37 பந்துகளை சந்தித்து மின்னல் வேகத்தில் 72 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய அணியின் கிரீன் 103 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
400 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. எனினும் மழை குறுக்கிட்டதால் ஆஸ்திரேலிய அணி 33 ஓவர்களில் 317 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. ஆனாலும் ஆஸ்திரேலிய அணியினர் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர்களான மாத்யூ ஷார்ட் (9) மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (0) இருவரும் பிரசித் பந்துவீச்சில் வீழ்ந்தனர்.
10 ஒவர் முடிந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. இதையடுத்து ஆஸ்திரேலியா 33 ஓவர்களில் 317 ரன்கள் எடுத்தால் போதும் என்று புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
டேவிட் வார்னர் 53 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூவாகி அவுட்டானார். மார்னஸ் லபுஸ்சாக்னே (27), ஜோஷ் இங்லிஸ் (6) ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றினார்.
கேமரூன் கிரீன் 19 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார். சீன் அப்போட் (54), ஜோஷ் ஹாஸில்வுட் (23) இருவரும் 9 வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணியினர் 217 ரன்களில் ஆல் அவுட்டாயினர்.