இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் வெற்றி, மற்றொன்றில் டிரா என 1 - 0 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
அதைத் தொடர்ந்து, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று இரவு பிரிட்ஜ் டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ் ஆட வந்தனர்.
ஆனால், வந்த வேகத்திலேயே கைல் மேயர்ஸ் 2 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஆட வந்த அலிக் அதானாஸ் 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஷாய் ஹோப் களமிறங்கினார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிராண்டன் கிங் தனது நிதானமான ஆட்டத்தின் மூலம் நிலைத்து நின்று ஆடினார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஷாய் ஹோப் தவிர (43 ரன்கள்) வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்குடன் விளையாட வந்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷண் மற்றும் ஷுப்மன் கில் களம் இறங்கினர். ஷுப்மன் கில் 7 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 19 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினர். இவர்களைத் தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா ஆட வந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த இஷான் கிஷண் அரை சதம் கடந்த நிலையில், (52 ரன்கள்) கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதைத் தொடர்ந்து ஷர்துல் தாக்கூர், ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்தார். பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஷர்துல் தாக்கூர் 1 ரன்னுக்கு அவுட்டாகி நடையைக் கட்டினார். அடுத்ததாக, கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய வந்தார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. 22.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. ஜடேஜா 16 ரன்களுடனும் ரோஹித் சர்மா 12 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1 - 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.