விளையாட்டு

ஆசிய போட்டி: குதிரையேற்ற போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு தங்கம்!

ஜெ.ராகவன்

சீனாவில், ஹாங்ஸு நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குதிரையேற்ற போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. இது தவிர, பாய்மரப் படகு போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

குதிரையேற்ற போட்டியில் இந்திய அணியின் சுதிப்தி ஹஜேலா (சின்ஸ்கி - குதிரை பெயர்), ஹிருதய் விபுல் செஹெடா (கெம்க்ஸ்புரோ எமரால்டு), அனுஸ் அகர்வல்லா (எட்ரோ) மற்றும் திவ்யகீர்தி சிங் (அட்ரெனலின் பிர்போட்) இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்தனர். இதற்கு முன்னர் இந்தியா 1982ல் நடைபெற்ற போட்டியில் குதிரையேற்றத்தில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் சீனா 204.882 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், ஹாங்காங் 204.852 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் உள்பட மொத்தம் 14 பதக்கங்களை வென்றுள்ளது. பாய்மரப் படகு போட்டியில் இந்தியா இரண்டு பதக்கங்களை வென்றுள்ள போதிலும் அந்த போட்டி முழுமை பெற்ற பிறகுதான் அவை பதக்கப் பட்டியலில் இடம்பெறும்.

இதனிடையே ஆடவர் கைப்பந்து போட்டியில் இந்தியா, பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்ததை அடுத்து 6வது இடத்தையே பெற முடிந்தது. பாகிஸ்தான் அணி, இந்தியாவை 21 - 55, 20 - 25, 23 - 25 என்ற நேர் செட்டுகளில் வென்று ஐந்தாவது இடத்தை கைப்பற்றியது.

ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் சுமித் நாகல், கஜகஸ்தானின் ஜுகயேவை 7 - 6 (9), 6 - 4 என்ற செட் கணக்கில்  வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதேபோல், மகளிர் ஒற்றையர் போட்டியில் அங்கீதா ரெய்னா, ஹாங்காங்கின் கருணரத்னவை 6 - 1, 6 - 2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் அங்கீதா மற்றும் பாம்பிரி ஜோடி பாகிஸ்தானின் சாரா, அகீல் ஜோடியை 6 - 0, 6 - 0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றது.

ஹாக்கி போட்டி ஏ பிரிவில் நடந்த ஆட்டத்தில் இந்தியா, சிங்கப்பூரை 16 - 1 என்ற கோல் கணக்கில் வென்றது. வாள் வீச்சுப் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பவானி, சீனாவின் யாகியிடம் தோல்வி அடைந்தார். 10 மீ. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய அணி வெண்கலம் பதக்கம் வெல்வதை தவற விட்டது. நீச்சல் போட்டியில் மெட்லி ரிலே பிரிவில் இந்திய ஆடவர் அணி தேசிய சாதனையை முறியடித்த போதிலும் ஐந்தாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT