விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா புதிய சாதனை!

கல்கி டெஸ்க்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 438 ரன்களைக் குவித்தது. இதில் விராட் கோலி மட்டும் 121 ரன்களை விளாசினார். அதைத் தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சை முடித்துக்கொண்டது. இந்திய அணியின் சார்பாக சிராஜ் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 183 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.

அதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரேஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடியாக தங்கள் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்தே பந்துகளை சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் விரட்டத் தொடங்கினர். ஒருகட்டத்தில் ரோஹித் சர்மா  ஆட்டம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். அவரது ஆட்டத்தில் ஒவ்வொரு பந்திலும் அனல் பறந்தது. இதன் மூலம் 5.3 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி தரப்பில் அதிவிரைவாக 50 ரன்கள் விளாசி சாதனை படைக்கப்பட்டது.

தனது மிரட்டல் ஆட்டத்தின் மூலம் ரோஹித் சர்மா 35 பந்துகளில் 50 ரன்களை விளாசி அசத்தினார். அதைத் தொடர்ந்து ஆடிய அவர், 44 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் இணை அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தனர். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 12.2 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவிரைவாக 100 ரன்களைக் கடந்த அணி என்ற சாதனையைப் படைத்திருக்கிறது இந்தியா. 

இந்திய அணியின் இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் 301 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. அதைத் தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் சூழலில், மழை அடிக்கடி குறுக்கிட்டதால் இந்தப் போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளது.

நாய்கள் ஏன் செருப்பை அடிக்கடி கடிக்கின்றன தெரியுமா?

உங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்காதீர்கள்!

நீரிழிவு எச்சரிக்கை: இந்த 5 பழக்கங்கள் இருப்பவர்கள் ஜாக்கிரதை!

Mammoth Cave: உலகின் மிகவும் நீளமான குகையை எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா?

தொலைந்த பொருள் திரும்ப கிடைக்கனுமா? இந்த கோவிலுக்குப் போங்க!

SCROLL FOR NEXT