கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டி என்றால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். அதற்கு அடுத்தபடியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதும் போட்டிகளைக் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனில் அதிக உலகக் கோப்பைகளை தன்வசம் வைத்திருக்கும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தினால், அவ்வெற்றியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள்.
டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்திய டாப் 5 போட்டிகள் குறித்து இப்போது பார்ப்போம்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளும் மாறி மாறி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவது வழக்கம்.
1. கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்றது. கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி மொகாலியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 320 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதுதான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற முதல் வெற்றியாகும். இப்போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த கேப்டன் தோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
2. நடப்பாண்டில் (2025) ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் பௌலர்களின் வேகமும், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டர்களின் நேர்த்தியான ஆட்டமும் தான் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது. இப்போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மெகா வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டது மட்டுமின்றி, ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
3. 1977 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தியவர் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிசன் சிங் பேடி. இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய பக்வத் சந்திரசேகர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
4. 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் சென்னை நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 179 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியை கேப்டனாக சிறப்பாக வழிநடத்தினார் முகமது அசாருதீன். இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்த சச்சின் டெண்டுல்கர் இப்போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
5. 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் நாக்பூர் நகரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில், தோனி தலைமையிலான இந்திய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனைப் படைத்தது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும், 12 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் ஜேசன் கிரெஜ்ஷா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.