IPL 2024: Chennai team fell in Rishabh Pant action game 
விளையாட்டு

ஐபிஎல் 2024: ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தில் வீழ்ந்தது சென்னை அணி!

எம்.கோதண்டபாணி

டைபெற்றுவரும் ஐபிஎல்  தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ ஸ்டேடியத்தில் எதிர்கொண்டு ஆடியது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டேவிட் வார்னரும் பிரித்வி ஷாவும் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடி டெல்லி அணிக்கு நல்ல ஒரு தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். டேவிட் வார்னர் 52 ரன்களும், பிரித்வி ஷா 43 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.

அடுத்தடுத்து வந்த டெல்லி அணியின் பேட்ஸ்மேன்களும் ரன் ரேட்டை 10க்கு குறையாமல் எடுத்துச் சென்றனர். இவர்களின் வேகத்துக்கு ஒரு ஸ்பீட் பிரேக்கை போட்டது இளம் பந்து வீச்சாளர் பதிரானாதான். தனது ஒரே ஓவரில் மிட்சல் மார்ஸ் மற்றும் ஸ்டம்பஸ் ஆகியோர் விக்கெட்டை கிளின் போல்ட் ஆக்கித் தகர்த்தார். முன்னதாக, வார்னர் அடித்த ஒரு அற்புதமான ஷாட்டை காற்றில் பறந்து கேட்ச் பிடித்து அனைவரையும் அசத்தினார் பதிரானா.

இதனால் டெல்லி அணியின் ரன் எடுக்கும் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும், களத்தில் நின்று கலக்கிய ரிஷப் பந்த் தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். விபத்தில் சிக்கி ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்திருக்கும் ரிஷப் பந்தின் அதிரடி ஆட்டம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இவர் 31 பந்துகளில் அரை சதமடித்து டெல்லி அணியை நல்ல ஒரு நிலைக்குக் கொண்டு சென்றார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 191 ரன்களை எடுத்தது.

அடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்கத்தில் இருந்தே பந்தை அடிப்பதற்கு மிகவும் தடுமாறினர். அதே நேரம் டெல்லி அணியின் பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. இதனால் ருதுராஜ் 1 ரன்னிலும் ரச்சின் 2 ரன்னிலும் அவுட்டாகி, சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தனர்.

அடுத்து ஆட வந்த ரஹானே ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ஆடி 45 ரன்களை சென்னை அணிக்கு எடுத்துக் கொடுத்தார். அதேபோல், மிட்செல்லும் தனது பங்குக்கு 34 ரன்களை எடுத்துக் கொடுத்தார். ஆனாலும், வெற்றியை நெருங்குவதற்கான ரன் ரேட் மிகவும் அதிகமாக இருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிவம் துபேவும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் ஆட்டத்தின் போக்கு டெல்லியின் அணி பக்கம் சாய்ந்தது.

முதல் இரண்டு போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காத நட்சத்திர ஆட்டக்காரர் மகேந்திர சிங் தோனி அடுத்து களம் இறங்கியதும் ஆட்ட அரங்கமே அதிரும் அளவுக்கு உற்சாக ஒலி எழுப்பினர் ரசிகர்கள். அதற்கு பதில் தரும்படி சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார் தோனி. அடுத்தடுத்து 4 பவுண்டரி, 3 சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவரது ஆட்டமும் தோற்றமும் பழைய தேனியை அனைவருக்கும் நினைவுபடுத்தியது. இவர் சந்தித்த 16 பந்துகளில் 37 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தனக்கே உரித்தான ஸ்டைலில் அந்த கடைசி பந்தில் அபாரமான சிக்ஸர் பறக்க விட்டு அரங்கை ஆர்ப்பரிக்க வைத்தார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் தோற்றாலும்  தோனியின் அதிரடி ஆட்டத்தைக் கண்டு சந்தோஷ வெள்ளத்தில் மிதந்தனர்.

இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணியால் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

SCROLL FOR NEXT