IPL 2024: Chennai team lost to Lucknow team
IPL 2024: Chennai team lost to Lucknow team https://www.mykhel.com
விளையாட்டு

IPL 2024: தொடக்க ஆட்டக்காரர்களின் சொதப்பலில் லக்னோ அணியிடம் வீழ்ந்தது சிஎஸ்கே!

எம்.கோதண்டபாணி

டைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டி, நேற்று இரவு லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணி, தனது தொடக்க ஆட்டக்காரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் லக்னோ அணியிடம் தோல்வி கண்டது.

முன்னதாக, டாஸ் வென்ற லக்னோ அணி, சென்னை அணியை பேட்டிங் செய்யப் பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திர மற்றும் ரஹானே ஆகியோர் களம் இறங்கினர். சந்தித்த முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்து ரச்சின் ரவீந்திரா சென்னை ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஆட வந்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து களத்திலிருந்து வெளியேறினார். சற்று பொறுப்புடன் ஆடிக்கொண்டிருந்த ரஹானே 24 பந்துகளைச் சந்தித்து 36 ரன்களை எடுத்து ஆட்டமிழடந்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும்.

இவர்களைத் தொடர்ந்து, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காணக் காத்திருந்த ஷிவம் துபே 3 ரன்களும், ரிஸ்வி 1 ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி கூட்டணி மிகவும் நிதானமாக ஆடி ஒன்றிரண்டு ரன்களாகச் சேர்த்தனர். 17 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 123 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து, 18வது ஓவரை ரவி பிஷ்னோய் வீச, அந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார் மொயீன் அலி. ஆனால், அடுத்த பந்திலேயே அவர் ஆவுட் ஆகி வெளியேறினார்.

அதைத் தொடர்ந்து ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் ஆட வந்தார் எம்.எஸ்.தோனி. வழக்கம்போல் தனது அற்புதமான ஆட்டத்தினால் 9 பந்துகளைச் சந்தித்து 28 ரன்களை எடுத்து அசத்தினார். இதில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். அதேபோல, ரவீந்திர ஜடேஜா 40 பந்துகளை சந்தித்து 57 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 176 ரன்களை எடுத்து முதல் பாதி ஆட்டத்தை முடித்துக்கொண்டது.

சென்னை அணியை வெற்றி கொள்ள 177 ரன்கள் தேவை என்ற இலக்கோடு அடுத்து ஆட வந்த லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் டீ காக் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடியாகவும் பொறுப்புடனும் தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சென்னை அணியின் பெரும் பிரயத்தனத்துக்கு பிறகு முஷ்தாபிஜூர் ரஹ்மான் வீசிய பந்தில் டீ காக் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதையடுத்து, கே.எல்.ராகுல் 53 பந்துகளை சந்தித்து 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 9 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.

அதைத் தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் இணைந்து ஆடி சுலபமாக லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. சென்னை அணி அதே மூன்றாவது இடத்திலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT