நடைபெற்றுவரும் ஐபிஎல் 2024 லீக் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, மும்பை அணியை எதிர்த்து விளையாடியது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சென்னை அணி, மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக, டாஸ் வென்ற மும்பை அணி, சென்னை அணியை பேட்டிங் செய்யும்படி பணித்தது. இதனையடுத்து ஆட வந்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒரு சிறிய மாறுதலாக ருதுராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக ரஹானேவும் ரச்சின் ரவீந்திராவும் களம் இறங்கினர். ரஹானே 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட வந்தார். இந்த ஜோடி சற்று நேரம் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், ரச்சின் ரவீந்திரா விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனாலும், தொடர்ந்து ருதுராஜ் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 40 பந்துகளில் 69 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இதில் 5 சிக்சர்கள் அடங்கும்.
இவரைத் தொடர்ந்து ஆட வந்த ஷிவம் துபே எப்போதும் போலவே தொடக்கம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இவர் 38 பந்துகளில் 66 ரன்களைக் குவித்தார். முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நான்கு பந்துகள் மீதமிருந்த நிலையில் தோனிக்கு ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. திறந்துவிடப்பட்ட கூண்டிலிருந்து கிளம்பிய சிங்கமாக தோனி களம் இறங்குகையில் வழக்கம்போல் அரங்கமே உற்சாக கோஷத்தால் அதிர்ந்தது. அந்த உற்சாக கோஷம் அடங்கி முடிக்கும் முன்பே முதல் பந்தில் சிக்ஸர், அடுத்த பந்தில் சிக்ஸர், அடுத்த பந்திலும் சிக்ஸர் என ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி அரங்கையே அதிர வைத்தார் தோனி. இவர் சந்தித்த 4 பந்துகளில் 20 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் முதல் பாதி ஆட்டத்தை முடித்து வைத்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 206 ரன்களை எடுத்தது.
அதனையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் மும்பை அணி தனது ஆட்டத்தைத் தொடர்ந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும் இஷான் கிஷனும் ஆட வந்தனர். இந்த ஜோடி அதிரடியாக தங்களது ஆட்டத்தை தொடங்கினாலும், இஷான் கிஷன் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து ஆட வந்த சூர்யகுமார் யாதவ் ரன் எதும் எடுக்காமல் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
இவரைத் தொடர்ந்து ஆட வந்த திலக் வர்மா 31 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 ரன்களும், டிம் டேவிட் 13 ரன்களும் எடுத்து களத்திலிருந்து வெளியேறினர். ஆனால், ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரோஹித் சர்மா மட்டும் நிலைகுலையாமல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 63 பந்துகளைச் சந்தித்து 105 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 5 சிக்ஸர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும்.
இதன் மூலம் மும்பை அணியால் 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா எடுத்த 105 ரன்களும் மும்பை அணி வெற்றி பெற உதவாமல் போனது. கடைசி நான்கு பந்துகளில் 20 ரன்களை அதிரடியாக எடுத்த தோனியின் ரன் குவிப்பு சென்னை அணியின் வெற்றிக்கு பெரிய பலமாக இருந்தது.