மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து இந்த தோல்விக்கு Bazball எனப்படும் அதிரடி ஆட்டம்தான் காரணமா? என்று இங்கிலாந்து ஊடகங்களும் ரசிகர்களும் இணையத்தில் கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை அடைந்தது. ஏனெனில், அந்த போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடி விளையாட்டு என்ற பாஸ்பால் முறையை கையாண்டது. இந்த வெற்றிக்குக் காரணம் அதுதான் என்று எண்ணிய இங்கிலாந்து அணி, தொடர்ந்து அந்த முறையையே பின்பற்ற ஆரம்பித்தது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்றது. அதுவும் விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமலேயே.
மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் பும்ராவின் பந்துவீச்சிற்கு இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் முயற்சி செய்து தனது விக்கெட்டை இழந்தார். இதைத்தான் இங்கிலாந்து ஊடகங்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய தவறாக கருதுகின்றனர். ஏனெனில் ரிவர்ஸ் ஸ்கூப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆகிய ஷாட்களை சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் மட்டும்தான் முயற்சி செய்ய வேண்டும். அதுவும் இந்த ஷாட்களைக் கொஞ்சம் மாற்றி அடித்தால் கூட LBW மூலம் அவுட் ஆக நேரிடும்.
ஆனால் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கும் ஜோ ரூட், ஒரு வேகப்பந்து வீச்சாளரிடம் இந்த ஷாட்டை முயற்சி செய்ததுதான் விக்கெட் விழக் காரணமானது. அதுவும் முதலிலேயே முயற்சி செய்ததால் போதுமான ரன் எடுக்காமலையே அவுட் ஆக வேண்டியதாயிற்று. இதனால் பாஸ்பால் முறையை டெஸ்ட் போட்டிகளில் கையாள்வது எவ்வளவு ஆபத்தானது என்று இங்கிலாந்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
பாஸ்பால் முறை பல உலக பேட்ஸ்மேன்களை நாசமாக்கிவிட்டது என்றும், 10 பேர் கொண்ட இந்திய அணியிடம் கூட இங்கிலாந்து அணி இப்படி தோற்றுவிட்டதே என்றும் விமர்சகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணியிலிருந்து அஸ்வின் இடையில் விலகியதால் இந்திய அணியில் 10 பேர் மட்டுமே விளையாடியது குறிப்பிடத்தக்கது.