விளையாட்டு

‘நான் எப்போதுமே சிஎஸ்கே பக்கம்தான்’ எம்.எஸ்.தோனி பெருமிதம்!

கல்கி டெஸ்க்

டைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் முதல் பிளேஆஃப் சுற்றில் நேற்று இரவு சிஎஸ்கே அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் எதிர்கொண்டன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையலாம் என்ற முனைப்பில் இரு அணிகளும் தங்களது பலத்தை வெளிப்படுத்தத் தயாராக இருந்தன. கடந்த லீக் சுற்று இரண்டிலும் குஜராத் அணியிடம் தோல்வி கண்டிருந்த சென்னை அணியின் கேப்டன் இந்தப் போட்டிக்காக தனி வியூகத்தையே அமைந்திருந்தார் என்றுதான் கூற வேண்டும்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் இந்தப் பிட்சில் 170 முதல் 180 ரன்கள் எடுத்தால் எடுத்தால் அதுவே வெற்றி இலக்குக்குக்கான ரன் என்று கிரிக்கெட் ஆர்வலர்களால் கூறப்பட்டது. அதன்படியே முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் எடுத்தது. ஆனாலும், குஜராத் அணி இந்த ஸ்கோரை நிச்சயம் அடித்துவிடும் என்றே பலரும் நினைத்திருந்த நிலையில், அவர்களின் எண்ணங்களை பொய்யாக்கியது கேப்டன் தோனியின் தலைமை வியூகம். ஆம், குஜராத் அணியை 157 ரன்களுக்கு மண்ணைக் கவ்வச் செய்தது. இதன் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.  

சென்னை அணியின் வெற்றிக்குப் பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஹர்ஷா போக்லேவுடன் பேசிய எம்.எஸ்.தோனி, “இது இன்னொரு இறுதிப்போட்டி எனக் கூற மாட்டேன். இதற்காக நாங்கள் இரண்டு மாதங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். சரியான சூழல் வாய்த்தால் ஜடேஜாவின் பந்து வீச்சை எதிர்கொள்வது கடும் சிரமமாக இருக்கும். அவரது பந்துவீச்சுதான் இன்று ஆட்டத்தையே மாற்றி இருக்கிறது. உங்கள் பந்துவீச்சின் தரத்தைத் தொடர்ந்து தேடுங்கள் என்பதையே இளம் பந்துவீச்சாளர்களுக்கு நான் அறிவுரையாகக் கூறுகிறேன். ஃபீல்டிங்கை அமைக்கும் விதத்தில் நான் கொஞ்சம் கடுமையான கேப்டனாகத்தான் நடந்துகொள்கிறேன் என நினைக்கிறேன். ஆனால், எனது உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டுதான் நான் அதைச் செய்கிறேன். என் மீது ஒரு கண்ணை தொடர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள் என்பதே எனது அணி ஃபீல்டர்களுக்கு நான் கூறியிருக்கும் செய்தி” என்றார்.

அதையடுத்து, `இதுதான் சேப்பாக்கத்தில் உங்களுக்குக் கடைசி போட்டியா?’ என்று ஹர்ஷா போக்லே கேட்டபோது, “அதைப் பற்றி முடிவெடுக்க இன்னும் எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் உள்ளன. இப்போது அதைப் பற்றி ஏன் யோசிக்க வேண்டும்? வரும் டிசம்பரில் மினி ஏலம் நடக்க உள்ளது. அடுத்த சீசனில் நான் விளையாடுவேனா அல்லது வேறு ஏதாவது பொறுப்பில் இருப்பேனா என்பது தெரியவில்லை. ஆனால், நான் எப்போதும் சி.எஸ்.கே அணியின் அங்கமாகத்தான் இருப்பேன்” என்று கூறினார் கேப்டன் எம்.எஸ்.தோனி.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

SCROLL FOR NEXT