முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை, தோனி மீது தற்போது பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். அதாவது, தோனியால்தான் என் மகன் வாழ்க்கை அழிந்தது, இப்போதுதான் இந்த உண்மைகள் வெளிவந்துக்கொண்டிருக்கிறன என்று பேசியது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சேவாக் அல்லது யுவராஜ் சிங் ஆகியோரில் ஒருவர்தான் அடுத்த கேப்டனாக வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், 2007ம் ஆண்டு தோனி இந்திய அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து இந்தியா உலகக்கோப்பை வென்றது மேலும் தோனிக்கு சாதகமாக அமைந்தது. ஆகையால், தோனி இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக மாறினார்.
அதன்பிறகு யுவராஜ் சிங் சிறிது காலம் இந்திய அணியில் பயணித்தாலும், 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கு பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். அவர் புற்றுநோயையும் எதிர்த்து இந்திய அணியில் அவ்வப்போது விளையாடத்தான் செய்தார். ஆனால், தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
இப்படியான சூழ்நிலையில்தான் அவர் நிரந்தரமாக கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தினார். இதற்கு தோனிதான் காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பலமுறை தோனியை தாக்கி பேசியிருக்கிறார். ஆனால், இப்போது அதைவிடவும் மேலாக கடுமையாக தாக்கி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, “தோனி தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால், எனது மகனுக்கு எதிராக செயல்பட்டு இருக்கிறார். எல்லா விஷயமும் இப்போது வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அதை என் வாழ்வில் மன்னிக்கவே முடியாது. நான் என் வாழ்க்கையில் இரண்டு விஷயங்களில் கவனமாக இருப்பேன். ஒன்று என்னை எதிர்த்தவர்களை அணைக்க மாட்டேன். மற்றொன்று எனக்கு எதிராக செயல்பட்டவர்களை மன்னிக்கவே மாட்டேன். அது என் குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சரி, என் மகனாக இருந்தாலும் சரி.
தோனி எனது மகனின் வாழ்க்கையையே அழித்துவிட்டார். யுவராஜ் சிங் இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் விளையாடி இருப்பார். யுவராஜ் சிங் போன்ற ஒரு மகனை முடிந்தால் நீங்கள் பெற்று எடுங்கள். அவர் புற்று நோய்க்கு எதிராக போராடி பின் மீண்டும் விளையாடியதற்காகவும், நாட்டுக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்ததற்காகவும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோரே 'இன்னொரு யுவராஜ் சிங் வரவே முடியாது' என்று கூறியிருக்கின்றனர்.” என்று காட்டமாக பேசியிருக்கிறார்.