விளையாட்டு

எண்மின் நச்சுநீக்கம் (Digital Detoxing) தேவையா?

விழிப்புணர்வுக் கட்டுரை

எஸ்.விஜயலட்சுமி

தினமும் மூன்று வேளையும் உணவு, இடையில் நொறுக்குத்தீனி என வாய்க்கும், வயிற்றிற்கும் வேலை கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். உடலின் உள்ளுறுப்புகள் நன்றாக வேலை செய்ய அவ்வப்போது நச்சு நீக்கம் செய்து கொள்வது அவசியம். உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றுவதே நச்சு நீக்கம் எனப்படும். குறிப்பிட்ட இடைவெளியில் விரதம் இருப்பது, பேதிக்கு எடுத்துக் கொள்வது போன்ற செயல்களால் வயிற்றை சுத்தம்செய்து, உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

அதே போல டிஜிட்டல் மயமாகிவிட்ட உலகில் டி,வி, அலைபேசி, மடிக்கணினியில் பெரும்பான்மையான நேரத்தை செலவிடுகிறோம். முகநூல், ட்விட்டர், வாட்சப் என கால நேரம் பாராமல் ஆழ்ந்து விடுகிறோம். டிஜிட்டல் சாதனப் பயன்பாட்டிலிருந்து தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் விலகி இருந்து, நம் உடல், மன ஆரோக்கியம் பேணுவதே எண்மின் நச்சுநீக்கம் ஆகும்.

எண்மின் நச்சுநீக்கத்தின் (Digital Detoxing) அவசியம் என்ன?

காலையில் கண்விழித்ததில் இருந்து இரவு உறங்கும் வரை எப்போதும் நம்முடன் இணைபிரியாமல் இருக்கும் ஒரு ஜீவனாகி விட்டது அலைபேசி. ஒரு நாளில் அதை எத்தனை முறை எடுக்கிறோம், எவ்வளவு நேரம் உரையாடுகிறோம், உபயோகிக்கிறோம், என கணக்கிட்டால் திகைத்துப்போவோம்.

அதிக நேரம் மொபைலில் பேசும்போது, அதிலிருந்து வெளிவரும் ரேடியேஷன், அதிகச்சூட்டை உண்டாக்கும். அது, மூளை, காது, இதயம் போன்றவற்றையும் பாதிக்கும். செல்போன் உபயோகிப்பதால் ஏற்படும் மிக முக்கியமான பிரச்னை கண்களுக்குத் தான். அதிகமான வெளிச்சம் சிறிய ஸ்கிரீனில் இருந்து வெளிவரும்போது, கண்ணின் தசைகளுக்கு வலி எடுக்கத் தொடங்கும். சாதாரண தலைவலி முதல் புற்றுநோய் வரை பாதிப்புகள் ஏற்படலாம்.

செல்லுமிடமெல்லாம் கொண்டு செல்லும் செல்ஃபோனால் நோய்க் கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகம். சுற்றுப்புறத் தூசு, அழுக்கு, மாசடைந்த காற்று மூலமாக கிருமிகள் செல்போனை அடைந்து, அப்படியே நம்மையும் தாக்குகிறது. நீண்ட நேரம், மொபைலைக் கையாளும் போது கை விரல்களில் உள்ள தசை நார்களில் பாதிப்புகள் ஏற்படும். ஒரே செயலை தொடர்ந்து செய்யும்போது கை விரல் தசைகளில், ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். பெரும்பாலான நேரங்களில் நாம் சரியான போஸ்ச்சர்களில் மொபைல் போன்களைப் பயன் படுத்துவதில்லை. படுக்கையிலோ, ஸோபாவிலோ படுத்துக்கொண்டே டைப் செய்வது, கழுத்தை வளைத்து, கண்களை சுருக்கிப் பார்ப்பது போன்ற செயல்களால் கண்கள், கழுத்து, முதுகு, தோள்பட்டை, கைகள், மணிக் கட்டுகளில் வலி  ஏற்படும். நினைவாற்றல் பாதிப்பு, மனஅழுத்தம், கோபம்,விரக்தி, தூக்கமின்மை போன்ற விளைவுகளைத் தருகிறது. சிலருக்கு நோமோஃபோபியா (Nomophobia) என்னும் மனநோயை உண்டாகும்.

எண்மின் நச்சுநீக்கத்தை கையாளும் முறை

ண்மின் நச்சுநீக்கத்தை செயல்படுத்த ஒரு திட்டம் வகுத்துக் கொள்ளலாம். முதலில் உணவு உண்ணும் நேரங்களில் கட்டாயமாக டி.வி, அலைபேசி இரண்டையும் பயன்படுத்தக்கூடாது என முடிவெடுத்து அதை செயல்படுத்தலாம். இதன் மூலம் தினமும் குறைந்தது ஒரு மணி நேர டிஜிட்டல் சாதனப் பயன்பாட்டைத் தவிர்க்கிறோம்.

மொபைலில் தேவையில்லாத ஆப்களை செயல் இழக்க செய்து விடலாம். நோட்டிஃபிகேஷன் சவுண்டை அணைத்து வைக்கலாம். மொபைலை அல்ட்ரா பேட்டரி சேவரில் போட்டு விடவும். ஹோம் ஸ்க்ரீனில் மிக அவசியமான செயலிகளை மட்டும் வைத்து, அதையும் தேவையென்றால் மட்டும் உபயோகிக்கலாம். டிஜிட்டல் டீடாக்ஸ் ஆப்பை இன்ஸ்டால் செய்து வைத்து அதில் இலக்கு நிர்ணயித்துக் கொள்ளலாம்.

காலையில் கண்விழித்த உடன் மொபைலைக் கையில் எடுக்காமல் அரை மணி நேரம் தள்ளிப்போடலாம். அதே போல் இரவு பத்து மணிக்கு மேல் அலைபேசி, மடிக்கணினி, டி.வி யை உபயோகிக்கக்கூடாது. வேண்டுமென்றால் அலைபேசியை படுக்கையறையில் வைக்காமல் வெளியே ஹாலில் வைக்கலாம். பிடித்த புத்தகத்தை எடுத்து வாசிக்கலாம். விரைவில் தூக்கம் வந்து உறங்கிவிடுவோம். (நல்ல ஆழமான நிம்மதியான உறக்கம்)

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ அலைபேசியை அணைத்துவிடலாம் அல்லது சைலென்ட் மோடில் வைக்கலாம். பின் வாரத்தில் அரை நாள் அலைபேசி உபயோகம் இன்றி இருக்கலாம். அதை ஒரு முழு நாள் என மாற்றலாம். பின்பு வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் அரை நாள் முழுக்க அலைபேசியைத் தவிர்க்கலாம். இது முதலில் கடினமாக இருந்தாலும் போகப்போக பழக்கமாக மாறிவிடும்.

சமீபத்தில் நமது பிரதமர் கூட அலைபேசி உபயோகத்தை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். டிஜிட்டல் சாதனங்கள் வெறும் பொழுதுபோக்குக்கு மட்டும் என்று எண்ணாமல், தகவல் தொடர்புக்குத் தான் அவை அவசியம் என்ற எண்ணம் ஆழமாக  வலுப்பெற்றால் தான் டிஜிட்டல் நச்சுநீக்கம் சாத்தியம்.

டிஜிட்டல் உலகின் மாயப்பிடியில் இருந்து விடுபட்டு, வெளியே வந்து பார்த்தால்தான் சுற்றியுள்ள அற்புதமான மனிதர்கள் நம் கண்களுக்குத் தெரிவர். அலைபேசியின் நீலத்திரையையே வெறித்துப் பார்த்த நம் கண்களுக்கு, இப்பூவுலகின் விதவிதமான அழகிய காட்சிகள் தென்படட்டும்.!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT