நடப்பு ஆண்டு டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில், நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்வார், என்று எதிர்பார்த்த நிலையில், இரண்டாவது இடத்தை வென்று வெள்ளிப்பதக்கத்தோடு நாடு திரும்பினார். ஆனால், வெள்ளிப்பதக்கம் வென்ற இவரை தங்கப் பதக்கம் வென்றதுபோல் நாடே வாழ்த்தியது.
இப்படியான சூழ்நிலையில் டைமண்ட் லீக் தொடர் நடைபெற்றது. இந்த டைமண்ட் லீக் தொடரில் 2024 ஒலிம்பிக் தொடரில் வெண்கலம் வென்ற கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.61 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஆனால், நீரஜ் சோப்ராவிற்கு இடுப்பில் காயம் ஏற்பட்டிருந்தது. அதனுடன்தான் ஒலிம்பிக் தொடரிலேயே பங்குக்கொண்டார். தற்போது அதே காயத்துடன்தான் டைமண்ட் லீக் தொடரிலும் பங்குபெற்றார். இவரது செயல்பாடு முதல் 5 முறைகளிலுமே மிகவும் மோசமாக இருந்தது. ஒலிம்பிக் தொடரிலும் அவர் தனக்கு கிடைத்த ஆறு வாய்ப்புகளில் ஐந்து முறை தவறு செய்ததால் அவரது வீசுதல், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐந்தாவது முறை அவர் வீசிய 89.45 மீட்டர் தூரம் அவருக்கு ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தது.
அந்தவகையில் இந்தப் போட்டியில் முதல் நான்கு வாய்ப்புகளில் 84 மீட்டர் தூரத்தைக் கூட எட்டவில்லை. ஆகையால், முதல் ஐந்து இடங்களில் கூட இடம்பெறமுடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர், ஐந்தாவது முறை 85.58 மீட்டர் தூரம் வீசினார். இதனால், அவருக்கு ஆறாவது வாய்ப்பு கிடைத்தது. ஆறாவது வாய்ப்பு என்பது முதல் ஐந்து முயற்சிகளில் முதல் மூன்று இடங்களில் இடம் பிடித்த வீரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீரஜ் சோப்ரா தனது கடைசி முயற்சியில் 89.49 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இவர் சுமார் நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து 85 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்து வருகிறார். கடைசி சில தொடர்களில் அவர் 89 மீட்டர் என்பதை தனது வழக்கமாகவே மாற்றிக் கொண்டு இருக்கிறார். அதன் காரணமாக 2174 நாட்களாக தான் பங்கேற்கும் தொடர்களில் எல்லாம் முதல் மூன்று இடங்களில் இடம் பிடித்து தொடர்ந்து பதக்கம் வென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.