அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் ரோஹித் ஷர்மா தக்கவைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் இதுகுறித்து பேசியதைப் பற்றிப் பார்ப்போம்.
ஐந்து முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, இந்த ஆண்டு மாற்றப்பட்டார். ரோஹித் ஷர்மாவின் கேப்டன் பதவி, ஹார்திக் பாண்டியாவிற்கு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து மும்பை ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதேபோல், மும்பை அணியின் ஆட்டமும் சுமாராகத்தான் இருந்தது. மும்பை அணி இறுதி போட்டிக்கும் முன்னேறவில்லை. அதற்கு கேப்டன்ஸி மாற்றம் என்ற ஒரே காரணத்தை மட்டும் முதன்மையாக சொல்லிவிட முடியாது.
ஆனால், ரசிகர்கள் அதுதான் காரணம் என்று ஹார்திக் பாண்டியாவை தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தனர். அப்போது மைதானத்தில் ஹார்திக் பாண்டியாவும் ரோகித் ஷர்மாவும் நன்றாகப் பேசிக்கொண்டது போலத்தான் இருந்தது. ஆனால், ரசிகர்கள் அவர்கள் இருவருக்கும் இடையே நிச்சயம் கருத்து வேறுபாடுகள் இருக்கும் என்றே கணித்தனர். இருவரும் அப்போதிலிருந்து உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன் வரை பேசிக்கொள்ளவே இல்லை என்ற செய்திகள் வந்துள்ளன. உலகக்கோப்பை பயிற்சியின் முதல் நாள் இருவருமே முகத்தை நேருக்கு நேர் கூட பார்த்துக்கொள்ளவில்லை. பின் இருவரும் இரண்டாவது நாள் பயிற்சியின்போது ஒரு இடத்தில் நின்று வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
ராகுல் ட்ராவிட்தான் இருவரிடமும் பேசி அதை முடிவுக்குக் கொண்டு வந்தாராம்.
ரோஹித் ஷர்மா இந்த ஆண்டில் கேப்டன் பதவியிலிருந்து தூக்கப்பட்ட நிலையில், அவர் அடுத்த ஆண்டு மும்பை அணிக்கு மீண்டும் விளையாடுவாரா என்று ரசிகர்கள் சந்தேகித்தனர். ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக மும்பை அணி அவரைத் தக்கவைத்துக் கொண்டது.
இதனையடுத்து இதுகுறித்து ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். அதாவது "உங்களுக்கே தெரியும் நான் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். அதன் காரணமாக தற்போது நான் தக்க வைக்கப்பட்டிருக்கும் இடம் சரிதான் என நினைக்கிறேன். அந்த வகையில் என்னை விட மற்ற வீரர்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்கிறார்கள். ஆனால் அது எனக்கு மகிழ்ச்சிதான். தற்போதைய இடத்தில் நான் இருக்கும் நிலையும் எனக்கு திருப்தியாகத்தான் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு பகுதியாக மீண்டும் நான் இடம் பெற்று இருப்பதில் மகிழ்ச்சி. மும்பையில்தான் நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன்.
இங்கு நிறைய கிரிக்கெட்டும் விளையாடியுள்ளேன். இந்த நகரம் எனக்கு சிறப்பு வாய்ந்தது. மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளது புத்துணர்ச்சியாக உள்ளது.” என்று பேசினார்.