தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தருமபுரி சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், ’’தமிழகத்தில் உள்ள இளைஞர்களை அதிக அளவில் ஈர்க்கும் ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை.
எனவே, சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல்லில் விளையாட தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் சிஎஸ்கே அணியில் ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்தவரைக் கூட தேர்வு செய்யவில்லை. பிற மாநில வீரர்களுக்கே அணியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
தமிழகம் சார்பில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணியாக சிஎஸ்கே அணி விளம்பரப்படுத்தப்பட்டு, பெரும் வர்த்தக லாபத்தை ஈட்டுகிறது. எனவே, தமிழக வீரர்கள் இல்லாத சிஎஸ்கே அணிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். ஆனால், இந்தக் கோரிக்கைக்கு அரசு தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.