நம் உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கவும், தசைகளின் வளர்ச்சிக்கு உதவவும், மேலும் பல ஆரோக்கிய நன்மைகளைத் தரவும் கூடியது புரதச் சத்து. தாவரப் பொருட்களான லென்டில்ஸ் அன்ட் லெக்யூம்ஸ் (Lentils and Legumes), அதாவது பருப்பு மற்றும் பயறு வகைகளில் நம் உடலுக்குத் தேவையான புரதச் சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. தாவர உணவுகளையே உட்கொள்ளும் வெஜிடேரியன்களின் புரதத் தேவைக்கு மிகப் பொருத்தமான உணவு பருப்புகளும் பயறு வகைகளுமாகும். இவற்றில் என்னென்ன ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
பருப்பு வகைகளில் புரோட்டீன் மட்டுமின்றி, நன்மை தரும் நுண்ணூட்டச் சத்துக்களின் அளவும் அதிகம் உள்ளன. இவை உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் உதவக் கூடியது. பருப்பு வகைகளில் இருபதிலிருந்து இருபத்தைந்து சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. இது கோதுமையில் இருப்பதை விட இரண்டு மடங்கும், அரிசியில் இருப்பதை விட மூன்று மடங்கும் அதிகமாகும்.
லென்டில்ஸில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உள்ளது. இவை உடனடி சக்தியாக மாற்றப்பட்டு உடலுக்குள் முழுவதுமாக செலுத்தப்படாமல் கொஞ்சம் கொஞ்சமாக உட்சென்று உடலுக்கு தொடர் சக்தி அளிக்க உதவுகிறது. இவற்றில் இரும்புச் சத்து, சிங்க், மக்னீசியம், கால்சியம், நார்ச்சத்துக்கள், ஃபொலேட், பொட்டாசியம், B வைட்டமின்கள் ஆகிய நுண்ணுயிர்ச் சத்துக்களும் அதிகம் உள்ளன.
பருப்பு வகைகள் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளதால் இவை நீரிழிவு நோய் உள்ளவர்களும் உண்ண ஏற்ற உணவாகிறது. பருப்பு மற்றும் பயறு வகைகளை வைட்டமின் B யின் ஸ்டோர் ஹவுஸ் என்றே கூறலாம்.
இத்தனை நன்மைகள் கொண்ட லென்டில்ஸ் அன்ட் லெக்யூம்ஸ் வகைகளில் சுண்டல், வடை போன்ற ஸ்நாக்ஸ் செய்தும் சமையல்களில் சேர்த்தும் தினசரி உட்கொள்ள அதிக உடல் ஆரோக்கியம் பெறுவது உறுதி.