2027ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலக்கோப்பை தொடரில் ரோகித் ஷர்மா விளையாடினால், மயக்கம் போட்டு விழுந்துவிடுவார் என்று ஸ்ரீகாந்த் கூறியது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வருவதற்கு முன்னர், ரோகித் ஷர்மாவும் விராட் கோலியும் சரியாக விளையாடுவது கிடையாது என்று கூறினார். ஆனால், பயிற்சியாளர் ஆனதற்கு பின்னர் இரு வீரர்களுக்கு இணை யாரும் இல்லை என்று பேசுகிறார். இப்படி மாற்றி மாற்றிப் பேசுவது குறித்து ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.
“கவுதம் கம்பீர் ஏன் மாற்றி மாற்றிப் பேசுகிறார் என்று தெரியவில்லை. கம்பீர், ரோகித்துக்கும் கோலிக்கும் இன்னும் நிறைய கிரிக்கெட் போட்டிகள் எஞ்சி இருக்கின்றது, இருவரும் 2027 ஆம் ஆண்டு உலக கோப்பையில் உடல் தகுதியுடன் இருந்தால் விளையாடுவார்கள் என பேசி இருக்கிறார்.
ரோகித் ஷர்மா ஒரு நல்ல வீரர் என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், அவருக்கு இப்போது வயது 37.
உலகக்கோப்பை வருவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. அப்போது அவருக்கு 40 வயது ஆகிவிடும். சச்சின், தோனி போல உடல் தகுதி இருந்தால், விளையாடலாம். ஆனால், மற்றப்படி 40 வயதில் கிரிக்கெட் விளையாடுவது முடியாத காரியம். ரோகித்தை பொருத்தவரை கம்பீர் கொஞ்சம் அதிகமாகவே கணித்து விட்டார் என்று நினைக்கின்றேன்.
தென்னாப்பிரிக்காவில் நடக்கும் தொடரில் ரோகித் சர்மா 40 வயதில் விளையாடினால் மயக்கம் போட்டு களத்தில் விழுந்து விடுவார். ஆனால், விராட் அப்படியில்லை. அவர் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறார். அதேபோல், ரோகித்தைவிட இரண்டு வயது குறைவும் கூட. ஆகையால், வரும் உலகக்கோப்பை போட்டியில்கூட அவர் விளையாடலாம்.” என்று பேசினார்.
கம்பீர் பயிற்சியாளர் ஆனதிலிருந்து எதாவது அவர் பற்றிய செய்தி வந்துக்கொண்டுதான் இருக்கிறது. பார்ப்போம். இன்னும் என்னெல்லாம் அவர் பேசுகிறார் என்றும், அதற்கு என்னெல்லாம் பதில் கருத்துக்கள் வருகிறது என்றும்.