தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்களால் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்கிறார் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மென் சஞ்சய் பங்கர்.
இரண்டாவது நாளில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்து இந்திய அணியைவிட 11 ரன்கள் முன்னிலை பெற்றது.
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் டீன் எல்கர், அதிரடி ஆட்டம் ஆடி சதம் எடுத்தார். 141 பந்துகளை சந்தித்து அவர் 140 ரன்களை குவித்தார். அதில் 20 பவுண்டரிகள் அடங்கும். இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை விளாசித்தள்ளினார்.
முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை 245-க்கு கொண்டு சென்றார் என்றால், டீன் எல்கர் தனது அதிரடி ஆட்டம் மூலம் தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தி, 11 ரன்கள் முன்னிலைபெற வைத்தார்.
இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பந்துவீச்சில் போதிய அனுபவம் இல்லை என்பது வெளிப்பட்டது. தென்னாப்பிரிக்க அணியின் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்குள் 141 ரன்களை அவர்கள் பறிகொடுத்தனர்.
இந்திய பந்துவீச்சாளர்கள் சராசரியாக ஒரு ஓவருக்கு 5 ரன்களை கொடுத்தனர். அவர்கள் பந்து வீசிய போதிலும் அது போதிய அளவு ஸ்விங் ஆகவில்லை. இதனால், எல்கர், டீ ஸோர்ஸி உள்ளிட்ட வீர்ர்கள் பந்தை அடித்து விளையாடி ரன்களை குவித்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சு ஏமாற்றம் அளித்தது. இந்திய அணியின் ஸ்கோர் 245 ஆக இருந்த நிலையில் அதற்கும் தென்னாப்பிரிக்காவை சுருட்டிவிட வேண்டும் என்று நினைத்திருந்த நிலையில் அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை தந்து நிலைமையை கடினமாக்கிவிட்டனர். இது இந்திய அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்கிறார் சஞ்சய் பங்கர்.
மூன்றாவது நாளான வியாழக்கிழமை எல்கர் மற்றும் இதர வீர்ர்களை சாய்ப்பது இந்திய அணிக்கு கடினமானதாகவே இருக்கும்.
சுருக்கமான ஸ்கோர்:
இந்தியா முதல் இன்னிங்ஸ் 245. கே.எல்.ராகுல் 101, விராட் கோலி 38. காகிஸோ ரபாடா 59 ரன்களுக்கு 5 விக்கெட்.
தென்னாப்பிரிக்கா: 5 விக்கெட் இழப்புக்கு 256. டீன் எல்கர் 140 நாட் அவுட். டேவிட் பெடிங்ஹாம் 56. ஜஸ்ப்ரீத் பும்ரா 48 ரன்களுக்கு 2 விக்கெட்.