வெயில் காலம் வந்துவிட்டாலே சொல்லிக் கொள்ளாமல் தேமல், படை போன்ற எரிச்சல் சமாசாரங்களும் வந்துவிடும். ஆரம்பத்தில் இலேசாக அரிப்பு எடுக்கும். பிறகு சருமம் வட்ட வடிவில் சிவந்தும் தடித்தும் காணப்படும். இது விரைவாக தொற்றிக்கொள்ளக் கூடியதும் கூட. உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் வந்து விட்டால் மற்றொரு பகுதிக்குச் சுலபமாக இது பரவிவிடும். இது ஒரு வகை பூஞ்சான். அதாவது ‘வெஜிடபிள் பாரசைட்’ என்ற பெயர் கொண்டது. இந்தத் தேமல் கால் பாதங்களில் வந்தால் ‘அத்லெட்ஸ் ஃபூட்’ என்பார்கள். தமிழில் சொன்னால் சேற்றுப் புண். உள்ளங்கையில் வந்தால் அதற்கு ‘ஹவுஸ் ஒய்ஃப் டெர்மடைடீஸ்’ என்று பெயர். தேமல், படை பெரும்பாலும் அக்குள், மார்பகத்தின் அடிப்பகுதி, பிறப்புறுப்பைச் சுற்றி வரும். குழந்தைகளுக்குக் கழுத்து மடிப்பில்கூட
தாக்கும்.
வியர்வை, சுத்தமின்மை, வெப்பம் போன்றவைதான் தேமல் படை வரக்காரணம். இன்னொரு வகையான தேமல் இருக்கிறது. இதை அழகுத் தேமல் என்கிறார்கள். தோலின் நிறம் சிவந்தோ, கறுத்தோ அல்லது வெளுத்தோ போய்விடும். இதில் விசித்திரம் என்னவென்றால், இந்த அழகு தேமல் தனக்குத்தானே ஒரு பார்டர் அமைத்துக் கொள்ளும். இந்த தேமலை நமது தமிழ் மக்கள் ஒரு நோயாகவே கருதுவதில்லை. அது தவறு. இந்த அழகு தேமல் வருவதற்கும் ஒரு வகை ஃபங்கஸ் தொற்றுதான் காரணம். இதைத் தவிர மோனிலியா படை என்ற ஒன்று உண்டு. இது விரல் இடுக்கு, சதை மடிப்பு, பிறப்புறுப்பு களைச் சுற்றி வரும். சிவந்து அரிப்பு ஏற்படுவதுடன், சில நேரங்களில் நீரும் கசியும்.
‘ஹேர் ஃபங்கஸ்’ என்ற இன்னொரு படையும் உண்டு. இது நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வளர்ப்பவர் களுக்கு அதிகமாக வரும். இது தாக்கும் இடம் தலை மற்றும் தலைமுடிதான். தேமலின் கடைசி வகை ‘விடலிகோ’ என்ற வெண்படை சருமத்தில் இருக்கும் பிக்மெண்ட் செல்கள், மெலனின் என்ற பொருளை உடல் வெளுத்துப்போகச் செய்யும். இது ஏன் வருகிறது என்று கேட்டால், சரியான பதில் இல்லை. ரப்பர் செருப்பு போடுவதில் இருந்து வயிற்றில் இருக்கும் பூச்சி வரை ஆயிரம் காரணங்களைச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
நாட்களைக் கடத்தாமல் சரியான நேரத்தில் சருமநோய் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஒரு சில நாட்களிலேயே இந்த படைகளைத் துரத்திவிடலாம். வியர்வை போக ஒரு நாளைக்கு இருவேளை குளித்து சுத்தமாக இருந்தாலே தேமல், படை போன்ற பிரச்னைகளைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை.