விளையாட்டு

ஆசியக் கோப்பை ஆட்டநாயகன் தொகையை மைதான ஊழியர்களுக்கு அளித்த சிராஜ்!

எம்.கோதண்டபாணி

சியக் கோப்பை 2023 இறுதிப் போட்டி நேற்று மாலை இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்றது. சிறு மழைத் தூறல் காரணமாக சற்று தாமதமாக இந்தப் போட்டி தொடங்கியது. இறுதிப் போட்டி என்பதால் இந்திய, இலங்கை மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. சவாலான ஸ்கோரை வெற்றி இலக்காக இலங்கை அணி இந்தியாவுக்கு நிர்ணயிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, முதல் ஓவரிலேயே அந்த அணியின் முதல் விக்கெட் வீழ்ந்தது.

அதையடுத்து, இந்திய அணியின் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் போட்டியின் மூன்றாவது ஓவரில் இலங்கை அணியின் நான்கு விக்கெட்டுகளை எடுத்து அந்த அணியை கதிகலங்க வைத்தார். அது மட்டுமின்றி, இந்தப் போட்டியில் அவர் வீசிய 7 ஓவர்களில் ஒரு மெய்டன் உள்பட, 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்திய வீரர்களின் சிறப்பாக பந்து வீச்சினால் இலங்கை அணி வெறும் 15.2 ஓவர்கள் மட்டுமே ஆடி, 50 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதையடுத்து, 51 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கோடு ஆட வந்த இந்திய அணி, 6.1 ஓவர்களிலேயே இந்த இலக்கை மிக எளிதாக எட்டி, ஆசியப் கோப்பை 2023 சாம்பியன் பட்டத்தை எட்டாவது முறையாகக் கைப்பற்றியது. நேற்றைய இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணமாக முகமது சிராஜ் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. அதுமட்டுமின்றி, இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் முகமது சிராஜுக்கு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிராஜ், “எனது பந்து வீச்சு இன்று சிறப்பாக இருந்தது என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் எனது பந்தில் பெரிதாக எட்ஜுகள் கிடைக்கவில்லை. ஆனால், அதன் பிறகு நான் வீசிய பந்துகளில் நிறைய எட்ஜுகள் கிடைத்தன. மேலும், தொடக்கத்தில் இந்த மைதானத்தில் பந்து சீமாகி வந்த நிலையில், இன்று ஸ்விங் ஆகி வந்தது. அதனால் நான் புல்லர் பந்துகளையே அதிகம் வீச நினைத்தேன். முதலில் இருந்தே பந்துகளை பவுண்டரிக்கு விடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். அதுமட்டுமின்றி, அணியின் பந்து வீச்சாளர்களுக்கு இடையே ஒரு நல்ல பிணைப்பு இருந்து. அதுவும் இந்தப் போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட உதவியது.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டு எனக்குக் கிடைத்த மொத்தத் தொகையையும் நான் இந்த மைதான ஊழியர்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன். காரணம், அவர்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை. அதுமட்டுமின்றி, அவர்கள் இல்லையென்றால் இந்தத் தொடரே இன்று நடைபெற்றிருக்காது” என்று பேசினார்.

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

SCROLL FOR NEXT