இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவர் கேப்டனுடன் சண்டைப் போட்டு ஓய்வறைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணி இடையே கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்கள் சேர்த்திருந்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இந்தப் போட்டியில்தான் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் தனது கேப்டன் ஷாய் ஹோப் உடன் மோதலில் ஈடுபட்டு பாதியிலேயே ஓய்வறைக்குத் திரும்பினார்.
அதாவது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தொடங்கியபோதே வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து மேத்யூ போர்ட் மற்றும் அல்ஜாரி ஜோசப் இருவரும் முதலில் பந்து வீசினர். இதனையடுத்து 4வது ஓவரில் அல்ஜாரி ஜோசப்பை பந்துவீச சொல்லி கேப்டன் அழைத்தார். அவர் பந்து வீசப் போகும்போது கேப்டன் அதற்கேற்றவாரு ஃபீல்ட் செட்டப் செய்தார். ஆனால், அது ஜோசப்பிற்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அந்த ஓவரில் முதல் பந்தை வீசிவிட்டு கேப்டனை பார்த்து ஃபீல்ட் செட்டப்பை மாற்றுமாறு சைகைக் காட்டினார். ஆனால், கேப்டன் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இதனால், அடுத்து பவுலிங் செய்ய நடந்துப்போகும்போதே மிகவும் கோபத்துடன் காணப்பட்டார். 2வது பந்தில் ஜோர்டன் காக்ஸ் விக்கெட்டை வீழ்த்தி போதும், அல்ஜாரி ஜோசப் கோபத்தில் கத்திக் கொண்டே இருந்தார். தொடர்ந்து அந்த ஓவரை மெய்டன் செய்த அவர், உடனடியாக களத்தில் இருந்து வெளியேறி ஓய்வறை நோக்கி நடந்து செல்ல தொடங்கினார்.
இதனை அங்கு கமெண்ட்ரி கொடுத்தவர்கள், மிகவும் விமர்சித்தார்கள். அதாவது என்னத்தான் கேப்டன் மீது கோபம் இருந்தாலும், களத்தை விட்டு செல்வது மரியாதையாக இல்லை என்று கூறினர்.
அதேபோல் பயிற்சியாளர் டேரன் ஷமி பவுண்டரி எல்லையில் இருந்து குரல் கொடுத்த போதும், அல்ஜாரி ஜோசப் கண்டுகொள்ளவில்லை.
நிழற்குடைக்கு சென்று அங்கு இருந்தவர்களிடம் கோபமாக பேசினார். பின் பயிற்சியாளர் அவரிடம் பேசி மைதானத்திற்கு திருப்பி அனுப்பினார். இதனால் ஒரு ஓவர் முழுவதும் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 வீரர்களை வைத்தே விளையாடியது. ஆனால், ஜோசப் திரும்பியதும் அவருக்கு பந்துவீச்சு கொடுக்கவில்லை, ஃபீல்டிங் மட்டுமே செய்தார்.