சர்வதேச அளவில் மற்ற எந்த விளையாட்டையும் விட கால்பந்து போட்டிகளில் அதிக அளவில் வன்முறை தலைவிரித்து ஆடுவது வழக்கம். கால்பந்து சரித்திரம் பல ரத்த ஆறுகளை சந்தித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக கால்பந்து அரங்கில் நடைபெறும் சில நிகழ்வுகள் மீண்டும் பெரும் வன்முறையை சந்திக்கும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
கருப்பின கால்பந்து வீரர்களை ஐரோப்பிய ஊடகங்கள் அடிக்கடி கிண்டல் செய்கின்றன.அவர்களின் நிறமும் தோற்றமும் எள்ளி நகையாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் சில கருப்பினத்தவர் அந்த நாட்டின் (அல்லது அந்த நாட்டின் பிரபல கிளப்களின்) குழுக்களில் தங்கள் திறமையால் இடம்பெறுகின்றனர். ஆனால் இவர்களைப் பார்வையாளர்களும் ஊடகங்களும் இரண்டாம்தர விளையாட்டு வீரர்களாகக் கருதி நான்காம் தர விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இவர்களை அதர் (other) என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிடுகின்றனர்.
சென்ற ஆண்டு இறுதிச்சுற்றில் இத்தாலியுடன் போட்டியிட்ட இங்கிலாந்து கால்பந்து அணி அந்தப் போட்டியில் தோற்றது. ஐம்பது வருடங்களுக்குப் பின் ஒரு சர்வதேச கால்பந்து போட்டியில் இங்கிலாந்து இடம்பெற்றிருந்தது. ஆட்ட நேரம் முடியும்போது இரு அணிகளும் சம கோல்கள் எடுத்ததால் பெனல்டி கிக் முறையில்தான் வெற்றி தீர்மானிக்கப்பட வேண்டிய கட்டாயம் நேரிட்டது. இங்கிலாந்து அணியின் சார்பாக பெனல்டி கிக்களை அடித்த மார்க்கஸ் ராஷ்போர்ட், ஜேடன் சான்சோ மற்றும் புகயோ சகா ஆகிய மூவரும் (தற்செயலாக) கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களது இனத்தை திட்டியும் கேவலப்படுத்தும் பலவித விமர்சனங்கள் எழுந்தன.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் என்ற அமைப்பு இனி இனவெறிக்கு இங்கு இடம் கிடையாது (நோ ரூம் ஃபார் ரேஸிஸம்) என்ற பிரச்சாரத்தை மூன்று வருடங்களுக்கு முன் தொடங்கியது. 'கருப்பினத்தவர் உயிர்களும் முக்கியமானவையே (பிளாக் லைவ்ஸ் மேட்டர்)' என்ற இயக்கம் இரு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
இந்த இயக்கம் நூதனமான ஒரு வழிமுறையை முன்வைத்தது. இதன்படி இனவெறிக்கு எதிரான விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு கால்பந்து போட்டியும் தொடங்குவதற்கு முன்னால் சில நொடிகள் ஒரு காலை மண்டியிட்டு உட்கார வேண்டும். இந்த செயலின் மூலம் சமத்துவம் அதிகமாகும் என்றும் இனவெறிக்கு எதிரான போக்கு விரிவடையும் என்றும் அந்த இயக்கம் கூறியது.
அதற்குப் பிறகு பல கால்பந்து வீரர்களும், கணிசமான வெள்ளையின கால்பந்து வீரர்கள் உட்பட, ஐரோப்பிய கால்பந்து கிளப்புகள் நடத்தும் கால்பந்து போட்டிகளுக்கு முன்பாக இப்படி சில நொடிகள் மண்டியிட்டு உட்காருவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
ஆனால் சமீபத்தில் இப்படி மண்டியிட மறுத்திருக்கிறார் வில்ஃப்ரைடு ஜாஹா என்ற கால்பந்து வீரர். இவர் ஒரு கருப்பர் என்பது மேலும் சுவாரசியமான தகவல். பிரீமியர் லீக் கிளப்-பில் ஃபார்வேர்டு நிலையில் சிறந்து விளங்கும் கால்பந்து வீரர் இவர். ' நான் போட்டிகள் தொடங்குவதற்கு முன் மண்டியிட மாட்டேன்' என்பவர் அதற்கான காரணங்களையும் விளக்கியிருக்கிறார்.
'மண்டியிடுவதை அவமானமானதாக நினைக்கிறேன். கருப்பர் இனத்தைச் சேர்ந்தவன் என்பதில் நான் பெருமைப் பட வேண்டும் என்று சொல்லித்தான் என் பெற்றோர் என்னை வளர்த்திருக்கிறார்கள். நாங்கள் உயர்ந்து நிற்க வேண்டுமே தவிர மண்டியிடக் கூடாது. அதேபோல 'கறுப்பர்களின் வாழ்க்கையும் முக்கியம்தான்' என்ற வாசகங்கள் அணிந்த ஆடையை நான் அணியப் போவதில்லை. இப்படியெல்லாம் செய்வதன் மூலம் எங்களை நாங்கள் தனிமைப் படுத்திக் கொள்வதாக உணர்கிறேன்.
சமத்துவத்துக்கு முயற்சி செய்யும்போது நம்மை தனிமைப்படுத்திக் கொள்ளும் செயல்களை செய்யக்கூடாது. இது என்னுடைய எண்ணம். அதேசமயம் மண்டியிடும் சக வீரர்களை நான் மதிக்கிறேன் என்பது வேறு விஷயம்'.
இந்த கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தக் கருத்து கருப்பர்களை உயர்த்திப் பிடிக்கிறது என்று சிலரும் சமத்துவத்துக்காகப் போராடும் ஒரு இயக்கத்தின் வழிமுறையை இவர் விமர்சனம் செய்வதால் 'எதிரிகளுக்குத்' துணை போகிறார் என்று சிலரும் கூறுகின்றனர்.