டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் நேற்று மோதியது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. முதலில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே சரியாக ஆடவில்லை.
தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல் ராகுல் 9 ரன்னிலும், ரோகித் சர்மா 15 ரன்னிலும் பௌலியன் திரும்பினர். அடுத்து வந்த விராத் கோலியும் 12 ரன்னில் அவுட் ஆக, இந்தியா 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன் பின்னர் வந்த ஹூடா ரன் எதுவும் எடுக்காமலும், ஹர்திக் பாண்ட்யா 2 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். தற்போது இந்திய அணி 11 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்தது.
அப்போது தினேஷ் கார்த்திக், சூர்ய குமார் யாதவ் என இருவரும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் 6 ரன்னிலும், ரவிசந்திர அஸ்வின் 7 ரன்னிலும் புவனேஸ்வர் குமார் 4 ரன்னிலும் முகம்மது சமி ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
ஆனால் மறுமுனையில் சூர்ய குமார் யாதவ், நிதானமாகவும் அதேநேரம் அடித்து ஆடியும் ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவர் 40 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 68 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிங் 2 ரன்னுடன் களத்தில் நின்றார். இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா ஆட துவங்கியது.
தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக், பவுமா களம் இறங்கினர். இந்த ஜோடியை அர்ஷ்தீப் சிங் ஆட்டமிழக்க செய்தார். அடுத்து வந்த ரோஸ்ஸவ் ரன் எதுவும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் வெளியேறினார். மறுமுனையில் பவுமா நிதானமாக ஆடி 10 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் அவரும் முகம்மது ஷமி பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அதன் பிறகு மார்க்ராம், மில்லர் களத்தில் களமிறங்கினர்.
தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 73 பந்துகளில் 101 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. இந்நிலையில் அபாரமாக ஆடிய மார்க்ராம் 41 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இந்நிலையில் 19.3 ஓவரில் தென் ஆப்பிரிக்கா 133 ரன்னை எட்டியது. தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பீல்டிங் இரண்டுமே மோசமாக இருந்தது. சூர்யகுமாரை தவிர மற்றவர்கள் சரியாக விளையாடாததால் இந்திய அணி தோல்வியை தழுவியது.