இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டியில் யாரை தொடக்க வீரராக கேப்டன் சூர்ய குமார் யாதவ் தேர்ந்தெடுப்பார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாகவுள்ளது.
உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா களமிறங்கப்போகும் இந்த போட்டி இரவு ஏழு மணிக்கு தொடங்கவுள்ளது. இப்போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள Dr.Y.S. ராஜசேகர ரெட்டி ACA- VDCA கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.இப்போட்டியின் கேப்டனாக சூர்ய குமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் துணைக் கேப்டனாக முதல் மூன்று போட்டிகளில் ருத்துராஜும் கடைசி இரண்டு போட்டிகளில் ஸ்ரேயஸ் ஐயரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.ஆசிய கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்களுக்கு இப்போட்டியில் வாய்ப்பளித்துள்ளனர். அந்த வீரர்களை உலககோப்பை போட்டிகளிலும் விளையாட வைக்காமல் ஓய்வு கொடுத்திருந்தனர்.
ஆனால், உலககோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் தோல்வி காரணமாக அதில் விளையாடிய சில வீரர்ளும் இப்போட்டியில் உள்ளனர்.இதையடுத்து இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் இந்திய அணியில் மூன்று தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஆகிய மூவரில் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பாகவுள்ளது.
எப்படியும் இந்திய அணி தொடக்க வீரர்களை இடது கை வீரர்கள் – வலது கை வீரர்கள் காம்பினேஷனில் களமிறக்கும். ருத்துராஜ் அணியின் துணை கேப்டன் என்பதால் நிச்சயம் அணியில் இருப்பார்.
மேலும் இஷான் கிஷன் இதுவரை இந்திய அணிக்காக டி20 தொடரில் 29 போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர். நடந்துமுடிந்த உலககோப்பை தொடரில் கூட இரண்டு போட்டிகளில் களமிறங்கினார். இந்திய அணியுடன் அதிகம் பயணம் செய்திருந்தாலும் அவருக்கு குறைவான வாய்ப்பே வழங்கப்பட்டது.
ஆகையால் இன்றைய ஆட்டத்தில் இஷான் கிஷன் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்குவதற்கு குறைவான வாய்ப்பே உள்ளது. மேலும் இந்திய அணியில் ஷமி, சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், சிவம் டூபே, திலக் வர்மா, அக்ஷர் படேல் ஆகியோரும் அணியில் உள்ளனர்.
உலககோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை தோல்வியடைய செய்தது. இதையடுத்து இந்த டி20 தொடரில் இந்தியஅணி அஸ்திரேலியா அணியை வீழ்த்துமா என்பதை டிசம்பர் 3 ம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.