இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதனால் பல விமர்சனங்களுக்கு உள்ளான இந்திய அணி அடுத்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற சில திட்டங்களை வகுத்துள்ளது. அந்தவகையில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்துவதற்காக அவர்களுடையே ஆயுதத்தையே கையில் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டி என்றும் பாராமல் ஒவ்வொரு பந்துகளையும் வீண் செய்யாமல் அதிரடியாக விளையாடி வருகிறது. அதேபோல் இங்கிலாந்தின் இளம் வீரரான டாம் ஹார்ட்லி தனது அறிமுக போட்டியிலேயே இரண்டாவது இன்னிங்ஸில் சுமார் ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதனைக் கருத்தில் கொண்டு ராகுல் டிராவிட் இந்திய அணியும் அதிரடியாக விளையாடினால் மட்டுமே அடுத்த போட்டியில் வெற்றிபெற முடியும் என்று ஒரு பேட்டியில் கூறினார்.
இந்தநிலையில் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் முழு மூச்சுடன் இறங்கி பயிற்சி செய்து வருகிறார்கள்.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சுழற்பந்து வீச்சையே பயன்படுத்தினார்கள். இந்திய வீரர்கள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சில் ரன் எடுக்க முடியாமல் மிகவும் தடுமாறினார்கள். ஸ்ரேயாஸ் அயரும் சுப்மன் கில்லும் சுழற்பந்து வீச்சை அடித்து ஆடாமல், தடுத்து ஆடுவதிலேயே கவனம் செலுத்தினார்கள்.
இதனை இந்திய அணி வீரர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சரி செய்யும் விதமாக பயிற்சி செய்து வருகிறார்கள். அந்தவகையில் இந்திய அணி வீரர்கள் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் பயன்படுத்தி பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இது இங்கிலாந்து அணியிடம் காபி அடித்த திட்டம் தான்.
ஏனெனில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முழுவதும் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களைப் பயன்படுத்தியே ரன் சேர்த்தார்கள். அதுவும் ஆலி பாப் இந்தியாவின் சுழற் பந்து வீச்சை ஸ்வீப் ஷாட் பயன்படுத்தியே பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். இப்போது அவர்கள் ஆயுதத்தை வைத்தே அவர்களை வீழ்த்த வேண்டும் என்று இந்திய அணி திட்டம் தீட்டியுள்ளது.
மேலும் ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ஸ்வீப் ஷாட்கள் ஆடுவதிலும் சில நெருக்கடிகள் உண்டு. இந்த ஷாட்களை கொஞ்சம் கவனமில்லாமல் ஆடினாலும் கூட IBW மூலம் விக்கெட் இழக்க வாய்ப்புள்ளது. நாளைத் தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு ஸ்வீப் ஷாட் கைக்கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.