Virat Kohli & Rohit Sharma 
விளையாட்டு

கடைசி வாய்ப்பு இதுதான்: ரோகித், கோலியை எச்சரித்த முகமது கைஃப்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

ஐசிசி நடத்தும் 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் வருகின்ற ஜூன் மாதம் 2 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய அணியினர் அமெரிக்காவில் பயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தொடர் தான் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இணைந்து இந்தியாவிற்காக பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளனர். இருவரும் இணைந்து தோனி தலைமையில் 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு, வேறு ஐசிசி கோப்பை எதையும் இன்னும் வெல்லவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தக் கனவு கைநழுவிப் போனது. நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றினால், அது இவர்கள் இருவருக்கும் வாழ்வின் மிகச் சிறந்த தருணமாக அமையும். மேலும், இனிவரும் டி20 போட்டிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதால், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்த உலகக் கோப்பையைக் கைப்பற்ற தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்வார்கள்.

இது குறித்து முகமது கைஃப் கூறுகையில், “விராட் மற்றும் ரோகித் ஆகிய இருவரும் 35 வயதைக் கடந்து விட்டதால், இன்னமும் 2 முதல் 3 ஆண்டுகள் வரை தான் இவர்களது கிரிக்கெட் பயணம் இருக்கும் என நினைக்கிறேன். கடந்த ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு, நடைப்பெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் கவனம் செலுத்த வேண்டும். லீக் போட்டிகளில் இந்தியாவிற்கு பெரிதாக சவால்கள் இல்லை. ஆகையால் சூப்பர் 8 சுற்று, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தங்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பாக அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் ரோகித் சர்மாவிற்கு சோதனையாக இருக்கக் கூடும். ஆகையால், இந்திய அணி எதற்கும் தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக ரோகித் மற்றும் விராட் இருவரும் தங்களுடைய ஆட்டங்களில் முழு கவனத்தையும் செலுத்தி கோப்பைக் கனவை உறுதி செய்ய வேண்டும். இளம் வீரர்களின் வருகையால் இதற்குப் பிறகு டி20 போட்டிகளில் உங்கள் இருவருக்குமான வாய்ப்பு குறைவு தான்” எனவும் முகமது கைஃப் எச்சரித்துள்ளார்.

இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்தை எதிர்கொள்கிறது. அதன் பின், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. விராட் கோலி ஐபிஎல் ஃபார்மை அப்படியே உலகக் கோப்பையில் தொடர்ந்தால், இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்கும். மேலும் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஓபனிங் வீரர்களாக களமிறங்குவார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT