Indian Team 
விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு இது இரண்டாவது முறை!

ரா.வ.பாலகிருஷ்ணன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சமீபத்திய செயல்பாடு சிறப்பாக இல்லை. நியூசிலாந்து அணி அனைத்து விதத்திலும் இந்தியாவை வீழ்த்தி விட்டது. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகள் தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் ரசிகர்களை குஷிப்படுத்தினாலும், டெஸ்ட் போட்டிகள் தான் வீரர்களின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வரும். டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவாக சொந்த மண்ணில் விளையாடும் அணிகள் தான் அதிகளவில் வெற்றி பெறும்.

எந்த அணியையும் அதன் சொந்த மண்ணில் எதிரணி வீழ்த்தினால் அது சாதனை தான். அதிலும் தொடர் முழுவதும் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்வது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். இதனை சமீபத்தில் நிகழ்த்தி காட்டியிருக்கிறது நியூசிலாந்து அணி.

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்திய அணி 1933 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தியாவின் 91 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 17 முறை சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது. இந்திய அணி தொடரை இழந்தாலும், ஒருசில போட்டிகளை டிரா செய்தும், வெற்றி பெற்றும் பெருத்த அவமானத்தைத் தடுத்துள்ளது. ஆனால் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி அடைவது இந்திய அணிக்கு இது இரண்டாவது முறை.

கடந்த 2000 ஆம் ஆண்டில், ஹான்ஸி குரோனியே தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கெண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரை முழுமையாக இழந்தது இந்தியா. அதற்குப் பின் 24 ஆண்டுகள் கழித்து சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்திருக்கிறது இந்திய அணி. மேலும் 3 அல்லது அதற்கும் மேற்பட்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழப்பது இதுவே முதல்முறை.

இந்தத் தோல்வியால் அடுத்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வாய்ப்பு குறைந்துள்ளது. நவம்பர் மாத இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடுகிறது. இதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறும். ஆனால், அது அவ்வளவு சுலபம் இல்லை. ஏனெனில் தற்போதுள்ள இந்திய அணி முழுத் திறனுடன் செயல்படவில்லை. பௌலிங் அருமையாக இருந்தாலும், பேட்டிங்கில் ரன் குவிக்க முன்னணி வீரர்கள் உள்பட அனைவரும் தடுமாறுவது, இந்திய அணியின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா கடந்த இரண்டு முறையும் வென்றிருக்கிறது. ஆகையால் இந்தியாவை வென்று கோப்பையைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா முயலும். இருப்பினும் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா? மீண்டும் தொடரை வென்று சாதனை படைக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT