அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2023 போட்டியில் 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செர்பிய வீரரான ஜோகோவிச், 9-ஆம் நிலை ஆட்டக்காரரான டெய்லர் பிரிட்ஸை 6-1, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
ஆர்தர் ஆஷ் மைதானத்தில் நடைபெற்ற ஜோகோவிச்-டெய்லர் இடையிலான போட்டி சுமார் இரண்டரை மணி நேரம் நீடீத்தது.
இந்த போட்டியில் பெரும்பாலும் ஜோகோவிச்சின் கை ஓங்கியிருந்தது என்றபோதிலும் அவ்வப்போது டெய்லர் கொடுத்த அழுத்த்ததை ஜோகோவிச் சமாளிக்க வேண்டியிருந்தது.
அமெரிக்க வீரரான டெய்லர், ஜோகோவிச்சுக்கு எந்த வகையிலும் இணையாகமாட்டார் என்ற போதிலும் மூத்த வீர்ருக்கு ஈடுகொடுத்து ஆடினார். 12 பிரேக் பாயின்டுகள் கிடைத்த போதிலும் அதில் இரண்டை மட்டுமே அவர், தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டார். அதேநேரத்தில் ஜோகோவிச், 9 இல் 6 பிரேக் பாயின்டுகளை சாதகமாக்கிக் கொண்டார்.
அமெரிக்க ஓபன் போட்டியில் காலிறுதியில் பிரிட்ஸை வென்றதன் மூலம் ஜோகோவிச் 47-வது முறையாக அரையிறுதியை எட்டி, ரோஜர் பெடரரின் (46) சாதனையை முறியடித்துள்ளார்.
மூன்று முறை யு.எஸ்.ஓபன் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், டென்னிஸ் விளையாட்டை நான் ரசிக்கிறேன். ஏனெனில் அதுதான் எனக்கு வாழ்வளித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட செர்பியாவிலிருந்து நான் டென்னிஸ் ஆட வந்தபோது பலரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர். ஆனாலும் மனம் தளராமல் பயணம் செய்து இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளேன். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான். எனது முன்னேற்றத்துக்கு பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் முக்கிய காரணம் என்றார் ஜோகோவிச்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் பென் ஷெல்டனும், பிரான்ஸில் டியாஃபோவும் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறுவபவர்களுடன் ஜோகோவிச் அரையிறுதியை எதிர்கொள்வார்.
ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸிடம் தோல்வி அடைந்தார்.
இதனிடையே மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் இளம் வீராங்கனை கோகோ காவ்ஃப் ஜலேனா ஆஸ்டாபென்கோவை 0-6, 2-6 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார். செரினாவுக்குப் பிறகு (2001), அரையிறுதியை எட்டும் முதல் அமெரிக்க வீராங்கனை கோகோ காவ்ஃப்தான்.
மகளிர் நான்காவது சுற்று ஆட்டத்தில் ஜலேனா ஆஸ்டாபென்கோ, உலகின் நெம்பர் 1 வீராங்கனை ஸ்வயாடெக்கை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.