Rohan Bopanna & Matthew Ebden 
விளையாட்டு

யு.எஸ்.ஓபன்: இரட்டையர் இறுதிச்சுற்றில் ரோஹன் போபண்ணா, மாத்யூ ஜோடி!

ஜெ.ராகவன்

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் ரோஹன் போபண்ணா (இந்தியா), மாத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி, பிரெஞ்சு இரட்டையர்களான நிக்கோலா, மாஹுட் மற்றும் பியரி ஹுயூஸ் ஹெர்பர்ட் ஜோடியை 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

முதல் செட்டின் தொடக்கத்தில் மாஹுட், ஹெர்பர்ட் ஜோடியின் கை ஓங்கியிருந்த்து (4-2). போபண்ணா, எப்டென் ஜோடி அவர்களை எதிர்கொள்ள சிரமப்பட்டனர். எனினும் போபண்ணா-எப்டென் ஜோடி சுதாரித்து ஆடி டை பிரேக்கருக்கு கொண்டுவந்தனர். முடிவில் 65 நிமிட போராட்டத்துக்குப் பின் முதல் செட்டை வென்றனர்.

இரண்டாவது செட் போபண்ணா-எப்டெனுக்கு சாதகமாகவே இருந்தது. முதலில் 5-1 என முன்னிலையில் இருந்தவர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி ஆட்டத்தை வென்றனர்.

43 வயது 6 மாதங்களாகியுள்ள நிலையில் கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் ஆடவர் போட்டியில் இறுதியில் நுழைந்துள்ள நபர் என்ற சாதனையை போபண்ணா பெற்றுள்ளார். இதற்கு முன்னர் 43 வயது 4 மாதங்கள் என்ற நிலையில் டேனியல் நெஸ்டர் இறுதிப்போட்டியில் நுழைந்ததுதான் சாதனையாக இருந்தது.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஜோ சாலிஸ்பரி (இங்கிலாந்து)- ராஜீவ் ராம் (அமெரிக்கா) மற்றும் இவான் டோடிக் (குரோட்டியா), ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) இடையிலான போட்டியில் வெற்றிபெறுபவர்களை போபண்ணா-எப்டென் ஜோடி இறுதிச் சுற்றில் சந்திக்கும்.

மகளிர் அரையிறுதியில் காவ்ஃப், முசோவா, சப்லென்கா மற்றும் மாடீஸன் கீஸ்

இதனிடையே மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் கோகோ காஃவ்ப், கரோலினா முசோவாவை எதிர்கொள்கிறார். மற்றொரு அரையிறுதியில் அர்யானா சபலென்கா, மாடிஸ் கீஸை எதிர்த்து விளையாடுகிறார்.

மேற்குறிப்பிட்ட நான்கு பெண் வீராங்கனைகளில் மாடிஸன் கீஸ், 2017 இல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதிச்சுற்றை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.எஸ். ஓபன் போட்டியின் முடிவுகள் எப்படியிருந்த போதிலும் அர்யான சபலென்கா உலகின் முதல் தர ஆட்டக்காரராக இருப்பார்.

காலிறுதியில் மார்கடா வோண்ட்ரஸோவாவை வென்ற மாடீஸன் கீஸ் அரையிறுதியில் சப்லென்காவை வெல்லும் நம்பிக்கையில் இருக்கிறார். கிராண்ட் ஸ்லாம் அரையிறுதியில் மாடீஸன் விளையாடுவது இது ஐந்தாவது முறையாகும்.

அரையிறுதியில் கரோலினா முசோவாவை சந்திக்க இருக்கும் கோகோ காவ்ஃப் 2022 ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஓபன் போட்டியில் இகா ஸ்வயாடெக்கிடம் தோல்வி அடைந்தவர். அமெரிக்கரான அவர் இதுவரை கிராண்ட் ஸ்லாம் போட்டியில் இறுதிச்சுற்றை எட்டியது இல்லை.

காலிறுதிப் போட்டியில் கோகோ காவ்-ப், 4 வது சுற்றில் ஸ்வயாடெக்கை வீழ்த்திய ஜெலனா ஆஸ்டாபென்காவை வென்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரையிறுதியில் முசோவாவுக்கு எதிராக தாக்குதல் ஆட்டத்தை அவர் நடத்துவரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கரோலினா முசோவா இரண்டாவது முறையாக கிராண்ட் ஸ்லாம் இறுதிச்சுற்றில் நுழைவதற்கான முனைப்புடன் இருக்கிறார்.

இரண்டு அரையிறுதிப் போட்டிகளுமே பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிச்சுற்றில் சப்லென்காவும் கோகோ காவ்ஃப் இருவரும் மோதக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் முசோவா, மாடீஸன் இறுதிச்சுற்றில் நுழைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT