Virat Kohli.
Virat Kohli. 
விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட்-ல் விராட் கோலி விலகல்!

ஜெ.ராகவன்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் பேசியதாகவும் முதல் இரண்டு டெஸ்டுகளில் பங்கேற்க முடியாமல் உள்ளதற்கான காரணங்களை குறிப்பிட்டதாகவும் தெரிகிறது. பொதுவாக விராட் கோலி, இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுப்பார். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஓய்வு கேட்டுள்ளார் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

கோலியின் முடிவுக்கு மதிப்பளிப்பதாகவும், அணி நிர்வாகம் அவருக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் விராட் கோலியின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு, அவரது தனிப்பட்ட காரணங்களை விமர்சிக்க வேண்டாம் என்று ஊடகங்களையும், ரசிகர்களையும் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய அணி டெஸ்ட் தொடரிவில் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும் கோலிக்கு பதிலாக யார் விளையாடுவது என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று விரைவில் யார் என்பது அறிவிக்கப்படும் என்றும் பி.சி.சி.ஐ. கூறியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாதிலும், இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டினத்திலும் நடைபெறுகிறது.

இதனிடையே விராட் கோலிக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் இடம்பெறலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தேர்வுக்குழுவினர் இதை உறுதிசெய்யவில்லை.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடாதது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவுதான். கோலிக்கு பதிலாக களம் இறக்கப்படுபவர் யார்? நான்காவது பேட்ஸ்மெனாக களம் இறங்கப்போவது யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதலில் ஸ்ரேயாஸ் ஐயர், அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் களம் இறங்கலாம் என்று தெரிகிறது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். உலக கோப்பை ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்த போதிலும், இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இந்தியா சிறப்பாகவே விளையாடியது. எனினும் இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணியை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

SCROLL FOR NEXT