ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்துவோம் என்று பாகிஸ்தானின் புதிய கேப்டன் சபதம் எடுத்திருக்கிறார்.
பாகிஸ்தானின் ஒரு நாள் மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனாக முஹமது ரிஸ்வான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பாபர் அசாம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதாவது பாபர் அசாம் இதுவரை 43 ஒருநாள் போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ளார். அதில் 26 போட்டிகளில் வெற்றிபெற்றும், 15 போட்டிகளிலும் தோல்வியையும் சந்தித்துள்ளார். அதேபோல் 85 டி20 போட்டிகளில் 48 வெற்றி, 29 தோல்வியுடன் உள்ளார். சொந்த மண்ணில் வழிநடத்திய 10 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளார். சென்ற வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதால், கேப்டன்மீது எதிர்மறையான கருத்துக்கள் எழுந்தன. ஆகையால் பாபர் அசாம் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அதன்பின்னர் ஷாகின் அப்ரிடி நியமனம் செய்யப்பட்ட நிலையில், திடீரென்று டி20 உலகக்கோப்பையின் கேப்டனாக பாபர் அசாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், உலகக்கோப்பையிலும் பாகிஸ்தான் அணி மிகவும் மோசமாக விளையாடியதால், பாபர் கேப்டன்ஸிதான் காரணம் என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்தனர். அப்போது பாபர் அசாம் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் சிலர் கூறினர். ஆகையால் அடுத்த கேப்டனுக்கான ரேஸில், முகமது ரிஸ்வான் முதல்முறையாக முன்னிலைக்கு வந்தார்.
இதனையடுத்துதான் தற்போது முகமது ரிஸ்வான் கேப்டன் பதவியை ஏற்றுள்ளார். அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது,
“ஆஸ்திரேலிய மண்ணில் நாங்கள் கடும் சிரமங்களை சந்தித்தோம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. கடந்த சுற்றுப்பயணங்களில் நாங்கள் ஆஸ்திரேலியாவில் சரியாக விளையாடவில்லை. அதேபோல் நாங்களும் ஆஸ்திரேலியாவுக்கு பல சிக்கல்களை கொடுத்தோம். இம்முறை நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு எங்கள் நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வோம். நாங்கள் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடரில் விளையாட சென்றோம். அப்போது அனைத்து போட்டிகளிலும் நாங்கள் வெற்றியின் அருகே வந்து தோல்வியை தழுவினோம். எங்கள் அணியில் சில குறைகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் சரி செய்து வருகிறோம். இதனால் இறைவன் ஆசியால் நிச்சயம் நாங்கள் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம்.” என்று பேசியுள்ளார்.