Cricket World Cup: Will Pakistan perform a miracle?
Cricket World Cup: Will Pakistan perform a miracle? 
விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துடன் இன்று மோதும் பாகிஸ்தான் அற்புதம் நிகழ்த்துமா?

ஜெ.ராகவன்

லகக் கோப்பை கிரிக்கெட் ஒரு நாள் போட்டித் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இங்கிலாந்து, பாகிஸ்தான் இரு அணிகளும் அரையிறுதியை எட்டுவது சாத்தியமில்லை என்றாலும், இது ஒரு முக்கியமான போட்டியாகும். இங்கிலாந்து அணி அரையிறுதியை எட்ட வாய்ப்பில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைய வேண்டுமானால் அற்புதம் நிகழ்ந்தால் மட்டுமே சாத்தியம். இங்கிலாந்து அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் ஒழிய பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பில்லை.

எனினும், இந்தப் போட்டியில் பாகிஸ்தானை இங்கிலாந்து வென்றால் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற முடியும். முதல் 8 இடத்தில் உள்ள அணிகள் மட்டுமே 2025ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட தகுதிபெறும். இங்கிலாந்து 8 போட்டிகளில் விளையாடி 2ல் வென்று, 7வது இடத்தில் உள்ளது. முதல் 8 இடத்தில் வர வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற வேண்டும்.

இன்றைய போட்டியில்  பாகிஸ்தான் மன உறுதியுடன் ஆடுவதுடன் அதிக ரன்களை குவித்தால்தான் இங்கிலாந்தை வெற்றிகொள்ள முடியும். வெறும் வெற்றி மட்டும் அதற்கு உதவாது. பாகிஸ்தான் முதலில் பேட் செய்தால் தொடக்க ஆட்டக்காரர்கள் 30 ஓவர்கள் வரையிலாவது தாக்குப்பிடிக்க வேண்டும். இன்றைய போட்டி பாகிஸ்தானுக்கு அரையிறுதியில் நுழைய கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாகும்.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை. கடைசி இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஏற்கெனவே கொல்கத்தா ஏடன் கார்டன் மைதானத்தில் இரண்டு போட்டிகளை சந்தித்துள்ளது. எனவே, மெதுவான மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் பாகிஸ்தான் முன்னிலை ஆட்டக்காரர்கள் அதிரடி காட்டி ரன்களை விளாசினால் மட்டுமே வெற்றிகொள்ள முடியும். அது நடக்குமா என்பது தெரியவில்லை. நியூஸிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்த ஃபக்கர் ஜமான் இன்றைய போட்டியிலும் அதிரடி காட்டினால் ஆட்டத்தின் போக்கு மாறலாம். ஷாகின் அஃபிரிடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். உலகக் கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும் அந்த அணியின் கனவு தகர்ந்துவிட்டாலும் முதல் எட்டு இடத்திற்குள் வந்தால்தான் சாம்பியன்ஸ் டிராபிக்கு செல்ல முடியும்.

வானிலையை பொறுத்தவரை மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை. எனினும் 32 டிகிரி வெயில் என்பது இங்கிலாந்து அணியினருக்கு சாதகமானது இல்லை. பாகிஸ்தான் முதலில் பேட் செய்யும்பட்சத்தில் அதற்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 91 ஒருநாள் சர்வதேச போட்டியில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 56 முறையும் பாகிஸ்தான் 32 முறையும் வென்றுள்ளன. மூன்று போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்ஸன், ஜானி பார்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டனோன், டேவிட் மலான், ஆதில் ரஷீத், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸி, டேவிட் வில்லே, மார்க் வுட் மற்றும் கிறிஸ் வோக்ஸ்.

பாகிஸ்தான் அணி: பாபர் ஆஸம் (கேப்டன்), ஷாதாப் கான், ஃபக்கர் ஜமான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், செளத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி அகா, முகமது நவாஸ், உஸாமா மிர், ஹாரிஸ் ரவூப், ஹஸன் அலி, ஷாகீன் ஷா அஃபிரிடி மற்றும் முகமது வாஸிம்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT