ஆயிரம் சிப்பிகளுக்கு இணையானது ஒரு இடம்புரி சங்கு என்றால் ஆயிரம் இடம்புரிகளுக்கு இணையானது ஒரு வலம்புரிச் சங்கு என்று கூறுவர். எனவே, சங்குகளின் அரசனாகவே வலம்புரிச் சங்கினைக் கூற முடியும்.
வீட்டில் வலம்புரிச் சங்கு வெறும் அலங்காரத்திற்காக மட்டும் வைக்கப்பட்டிருந்தாலும், அவ்வீட்டில் குபேரனும், மகாலட்சுமியும் நித்தியவாசம் புரிவார்கள்.
வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து பூஜித்தால், செல்வம் இழந்து, செல்வாக்கு இழந்து போனவர்கள்கூட இழந்ததை இழந்த இடத்திலேயே மீண்டும் பெற முடியும்.
பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கோ கடன் கொடுக்கும் அளவிற்கோ செல்வ நிலை உயரும்.
புத்திரகாரகனான குருவுக்கு பஞ்சமி திதியன்று வலம்புரிச் சங்கில் பால் வைத்து பூஜித்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்க்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
வலம்புரிச் சங்கு இருக்கும் வீட்டை பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் கோளாறுகள் அணுகாது.
கடன் தொல்லையால் தவிப்பவர்கள் பெளர்ணமிதோறும் சங்கிற்கு குங்குமம் அர்ச்சனை செய்து வர கடன் விரைவில் தீரும். 16 வலம்புரிச்சங்கு கோலமிட்டு நடுவில் தீபமிட்டு வர உடனே பலன் கிடைக்கும்.
சங்கில் கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால் பிறவிகளை அறுக்கலாம்.
சங்கில் பாலை நிரப்பி இறைவனை நீராட்டினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம்.
செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் வலம்புரிச் சங்கில் பால் வைத்து 27 செவ்வாய்க் கிழமைகள் அம்மனை பூஜித்தால் எல்லாத் தோஷங்களும் நீங்கி திருமணம் நடைபெறும்.
இடம்புரி சங்கு ‘வாமா வர்த்தம்’ என்றும் வலம்புரிச்சங்கு ‘தக்ஷிணாவர்த்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவின் இடதுகையில் சங்கு இருப்பதைப் பார்க்கிறோம். அது வலம்புரிச் சங்கு.
வலம்புரிச் சங்கில் கோமடி சங்கு என்னும் அரியவகை சங்கு காணக் கிடைக்கிறது. (கோ – பசு; மடி – பசுவின் மடி), பல லட்சம் இடம்புரிச் சங்குகின் மத்தியில் அரிதாக ஒரேயொரு வலம்புரிச் சங்கு தோன்றுகிறது. அதுபோல பல லட்சம் வலம்புரிச் சங்குகளின் மத்தியில் அரிதாகத் தோன்றுவது கோமடிச் சங்கு. இந்தக் கோமடிச் சங்கினால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து அம்பிகையின் வடிவான பசுவின் மடியிலிருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்வதைப் போன்றதென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அரச வம்சத்தினர் தங்களது ஆற்றலையும், அடையாளத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தனித்தனி வகை சங்குகளைப் பயன்படுத்தினர். ஸ்ரீ கிருஷ்ணர் பாஞ்சஜன்யம் என்ற சங்கினையும், அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கினையும், யுதிஷ்டிரன் அனந்தவிஜயம் என்ற சங்கினையும், பீமசேனன் பெளண்டரம் என்ற சங்கினையும், நகுலன் சுகோஷம் என்னும் சங்கினையும், சகாதேவன் மணிபுஷ்பகம் என்னும் சங்கினையும் பயன்படுத்தினர் என்று மகாபாரதம் கூறுகிறது.