சித்த மருத்துவ நிபுணர் நநந்தினி சுப்ரமணியம்
கோடை காலத்தில் முதலில் கடைபிடிக்க வேண்டியது தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்வதுதான்...
இக்காலத்தில் வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
காலையில் நீராகாரமோ அல்லது மோரோ பருக வேண்டும்.
அறுசுவை உணவு சிறந்தது எனினும் கோடை காலத்தில் கசப்பு, இனிப்பு, துவர்ப்பு சுவையுள்ள பொருட்களை அதிகம் சேர்ப்பதனால் பித்தம் சமப்படும்.
மண்பானையில் நீர் விட்டு அதில் வெட்டிவேர், நன்னாரி வேர் போட்டுப் பருக உடல் குளிர்ச்சி அடையும்.
இரவு உறங்கும் முன் உள்ளங்கை, உள்ளங்கால்களில் பசுநெய் அல்லது எண்ணெய் பூசிக்கொள்ள கண்கள் குளிர்ச்சி அடைந்து கண் நோய்கள் தடுக்கபெறும். இதற்கு சித்த மருந்தான குங்கிலிய வெண்ணெயையும் உபயோகிக்கலாம்.
நுங்கு, இளநீர், பழச்சாறுகள் நன்மையை உண்டாக்கும்.
சீரகத்தை நீரில் போட்டு காய்ச்சி குடிக்க இக்காலத்தில் அதிகரிக்கும் பித்தம் குறைந்து, பித்தத்தால் உண்டாகும் நோய்களான மூலநோய், பௌத்திரம், ஆசனவாயில் ஏற்படும் கட்டிகள், வேர்க்குரு, வயிற்றுப் புண்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.
இரவில் கருப்பு உலர்ந்த திராட்சையை ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட உடல் அனல் தணிந்து நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.
கோடைக்காலத்தில் பகல் தூக்கத்தை தவிர்த்தல் நல்லது. இரவில் கண்விழித்தல் கூடாது.
உணவில் உப்பு குறைவாக பயன்படுத்த வேண்டும்.
பொதுவாகவே சூரியனிடமிருந்து வரும் புறஊதா கதிர்களால் சருமம் பாதிப்படைய கூடும். பருக்கள் என்பதை தாண்டி உஷ்ண கட்டிகள், வேனீர் கட்டிகள் ஏற்படும். இதற்கு கற்றாழை மடலை வெட்டி நீரில் ஏழு முறை கழுவ அதில் உள்ள மஞ்சள் போன்ற திரவம் வெளியேறும். பின்பு அதன் உள்ளிருக்கும்.
சதை பகுதியை மசித்து அப்படியே முகம், கழுத்து, கை, கால்களில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவ சரும பாதுகாப்பு உண்டாகும்.
தினமும் குளிப்பதற்கு முன்பு முகத்தில் தயிர் தடவி பத்து நிமிடங்கள் ஊற வைத்து குளித்தால் முகத்தில் வெயிலால் நிறம் மாறாது. தயிர் முகத்தில் இருக்கும் அழுக்கை வெளியேற்றக் கூடியது.
குழந்தைகளுக்கு வெயில் நேரத்தில் வயிற்று வலி பிரச்சனை வராமல் இருக்க குழந்தையின் தொப்புளில் விளக்கெண்ணெய் தடவி வரலாம். இதனை பெரியவர்களும் பின்பற்றலாம்.
கோடைகாலத்தில் குளிர்ச்சியை தக்க வைக்க விரும்பினால் உங்களுக்கு ஏற்றது ரோஜா குல்கந்து. இதில் இயற்கையாகவே கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது இரைப்பை அழற்சி, சரும பராமரிப்பு, அசீரணம், மன அழுத்தம் போன்றவைகளுக்கு நன்மை அளிக்கக் கூடியது. வெயில் காலத்தில் மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், தலைச்சுற்றல் போன்றவற்றை சரி செய்யும்.
சித்த மருத்துவத்தில் குறிப்பிட்டுள்ள அஞ்சனம் (கண்மை தீட்டுதல்) பல நோய்களுக்கு தற்காப்பாக உள்ள ஒன்று. இதற்கு கரிசாலையால் செய்யப்பட்ட இயற்கையான மை சிறந்தது.
கோடைகாலத்தில் எப்பொழுதும் A/C அறையில் அடைந்து கிடக்காமல் சிறிது நேரம் மர நிழல் அதிகமாக உள்ள இடங்களில் காலார நடப்பது, புங்கன் மர நிழலில் இளைப்பாறுவது இயற்கையாகவே நம் உடல் சூட்டை தணிக்கும்.
இவ்வழிமுறைகளைப் பின்பற்ற கோடை காலத்தில் வரும் நோய்களைத் தவிர்த்து நலம் பெறலாம்.