உலக அளவில் தேயிலை உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. அஸ்ஸாம், டார்ஜிலிங் மற்றும் நீலகிரி மலைச் சரிவுகள் மிகவும் பிரபலமான இந்திய கருப்பு தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இடங்களாகும்.
பிளாக் டீ: உலகில் அதிகமான மக்களால் உட்கொள்ளப்படும் தேநீர் வகைகளில் ஒன்று பிளாக் டீ. ‘காமெலியா சினென்சிஸ்’ என்ற தாவரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் நான்கு வகையான தேயிலைகளில் இதுவும் ஒன்று. மற்றவை வெள்ளை, ஓலாங் மற்றும் பச்சை தேயிலைகள். தெளிவான மனநிலையைப் பெற பெரும்பாலான மக்களால் பிளாக் டீ அருந்தப்படுகிறது.
பிளாக் டீ அருந்துவதால் கிடைக்கும் 5 நன்மைகள்:
இதய ஆரோக்கியம்: இதய ஆரோக்கியத்திற்கு வலு சேர்ப்பதில் பிளாக் டீ முக்கியப் பங்கு வகிக்கிறது. இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றது. அது மட்டுமின்றி, ஒருசில ஆய்வுகளின் அடிப்படையில், தொடர்ந்து தேநீர் அருந்துவது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற குறிப்பிடத்தக்க சில பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தையும் குறைப்பதாகக் கூறப்படுகிறது.
குடல் ஆரோக்கியம்: நமது உடலின் குடற்பகுதியில் பில்லியன் கணக்கில் நுண்ணுயிரிகள் வசிக்கின்றன. பிளாக் டீயில் நிறைந்திருக்கக்கூடிய பாலிபினால்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு கலவைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான ஆரோக்கியம் ஆகிய இரண்டையும் அதிகரிக்க உதவுகின்றன.
நீரிழிவு கட்டுப்பாடு: கூடுதல் இனிப்பு இல்லாத பிளாக் டீ உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, உங்கள் உடல் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது: பிளாக் டீயில் பாலிபினால்கள் நிறைந்திருக்கின்றன. அவை புற்றுநோய் உயிரணு இறப்பை அதிகரிக்கவும் மேலும் புற்றுநோய் வளர்ச்சியைக் குறைக்கவும் உதவுகிறது. தொடர்ந்து பிளாக் டீ அருந்துவதால் புற்றுநோயை போக்க முடியாது என்றாலும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை மெதுவாக்கி, விரைந்து வரும் ஆபத்துக்களைக் குறைக்க முடியும். பிளாக் டீ அருந்துவது வாய் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கவனத்தை மேம்படுத்துகிறது: பிளாக் டீயில் காஃபின் மற்றும் L-theanine அமினோ அமிலம் நிறைந்திருக்கின்றன. இவை மூளையின் கவனம், விழிப்புணர்வு மற்றும் நினைவாற்றல் போன்றவற்றை ஊக்குவிக்கின்றன. மேலும், அறிவாற்றல் செயல்பாட்டில் பிளாக் டீ மற்றும் தண்ணீரை உட்கொள்வதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.