நமது உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியை கல்லீரல்தான் செய்கிறது. அதேபோல உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யவும், உடலில் உள்ள கொழுப்பை கல்லீரலே சுத்திகரிப்பு செய்கிறது. நமது உடல் உள்ளுறுப்புகளில் அதிக வேலை செய்யும் உள்ளுறுப்பான கல்லீரலை பாதுகாக்க சில உணவுகளை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு அல்லது கல்லீரல் சார்ந்த நோய்கள் வந்தாலே அதற்குக் காரணம் ஆல்கஹால்தான் என நினைக்கும் மனநிலை அனைவருக்குமே உள்ளது. ஆனால் மதுவை விட கல்லீரலை மோசமாக பாதிக்கும் உணவுகளும் உள்ளது. அந்த உணவுகள் என்னென்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
1. மைதா உணவுகள்: பொதுவாகவே மாவு பொருட்களில் அதிகப்படியான கலோரி இருக்கும். குறிப்பாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட மைதா உணவுகளை சாப்பிடும்போது, உடலுக்கு பாதகத்தை ஏற்படுத்தலாம். இவற்றை ஒருவர் சாப்பிடும்போது உடனடியாக ரத்த சர்க்கரை அளவு உயரும். ரத்த சர்க்கரை உயர்ந்தால் இன்சுலின் தேவை அதிகரித்து கல்லீரலுக்கு அதிக அழுத்தம் ஏற்படும். இதனால் கல்லீரலில் கொழுப்புப் படியும் அபாயம் உள்ளது.
2. பதப்படுத்தப்பட்ட இறைச்சி: மார்க்கெட்டில் பிரஷ்ஷாகக் கிடைக்கும் இறைச்சியை நாம் அளவாக சாப்பிடுவது நல்லது. ஆனால் பல நாட்கள் கெட்டுப் போகாத அளவுக்கு பதப்படுத்தி விற்கப்படும் இறைச்சி தமது கல்லீரலுக்கு மட்டுமல்ல உயிருக்கே ஆபத்தாக முடியலாம். இத்தகைய இறைச்சியில் அதிகப்படியான கார்போஹைட்ரேட், கொழுப்பு, சோடியம் போன்றவையே இருக்கும் என்பதால், அதன் உண்மையான ஊட்டச்சத்துக்களை நீங்கள் பெற முடியாது. எனவே இது உங்கள் கல்லீரலை கடுமையாக பாதிக்கலாம்.
3. அதிக சக்கரை: இனிப்பு உணவுகள் அனைவருக்குமே பிடிக்கும் என்றாலும், சர்க்கரை அதிகப்படியாக சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது கல்லீரலுக்கு ஆபத்தாகும். ஒருவர் மது அருந்தினால் எப்படி கல்லீரல் பாதிக்கப்படுமோ அதற்கு இணையான பாதிப்பு அதிக அளவு சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படுகிறது.
4. உப்பு அதிகமுள்ள உணவுகள்: உப்பு அதிகமுள்ள உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளும்போது, உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கிறது. இது உங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, நீர் கோர்க்கும் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் உங்கள் கல்லீரல் சேதமடைந்து, கல்லீரல் சிரோசிஸ் பிரச்சனை வர வழி வகுக்கலாம்.
5. அதிகம் எண்ணெய் நிறைந்த உணவுகள்: அதிகம் எண்ணெய் நிறைந்த உணவுகளில் கெட்ட கொழுப்புச் சத்தின் அளவு அதிகமாக இருக்கும். இது ஒருவரது கல்லீரலை நேரடியாக பாதிக்கலாம். எனவே உங்களது உணவில் முடிந்த வரை எண்ணெயைக் குறைவாகவே பயன்படுத்துங்கள். அதிக எண்ணை கொண்ட உணவுகளை தவிர்ப்பது உங்களை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.